நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு மாவட்டம், சென்னி மலையில் பெட்ஷீட் உற்பத்தியாளர்கள் வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெட்ஷீட் உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இதனை சார்ந்து, தறி ஓட்டுதல்,பாவு பிணைதல், நூல் சுற்றும் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மற்ற நூல்களை போலவே, பெட்சீட் உற்பத்திக்கான நூல் ரகங்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த இரண்டு்மாதத்தில் மட்டும் நூல் விலை 30% விலை அதிகரித்துள்ளது.தொடர்ந்து நூலின் விலை அதிகரித்து வருவதால், அதற்கேற்ப உற்பத்தி செய்யப்படும் பெட்சீட் ரகங்களை விற்பனை செய்ய முடியாமல் விசைத்தறியாளர் கள் பாதிக்கப்பட்டனர். நூல்விலையை கட்டுப்படுத்த கோரி அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் ஒரு நாள்(7.4.2022) அடையாள உற்பத்தி நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், 24 மணி நேரமும் விசைத்தறிகளின் ஓட்டத்தால் ஓசை எழும்பிய சென்னிமலை பகுதி இன்று நிசப்தமாக காணப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தாவிட்டால் நிரந்தரமாக விசைத்தறி தொழிலை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் சௌந்திரராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.