Close
செப்டம்பர் 20, 2024 3:45 காலை

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அறிமுக விழா

புதுக்கோட்டை

புதுகை அரசு கல்வியியல் கல்லூரியில் நடந்த யூத்ரெட்கிராஸ் சங்க அறிமுக விழாவில் பேசுகிறார், இந்திய ரெட்கிராஸ் சங்க புதுக்கோட்டை மாவட்ட இணைச்செயலாளர் சா.விஸ்வநாதன்

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில்    இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அறிமுக விழா (9.4.2022)  சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் அ.நாகராஜன் தலைமை  வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட இந்திய ரெட்கிராஸ் சங்க இணைச்செயலாளர் சா.விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசியதாவது: ரெட்கிராஸ் சங்கத்தின் கோட்பாடுகள் அச்சங்கத்திற்கு பயன்படக் கூடியது மட்டுமல்ல, தனிமனிதர்களை மேம்படுத்தவும், சமூகத்தை நெறிபடுத்தவும் உதவக் கூடியது.

ரெட்கிராஸ் சங்கம் உருவாகக் காரணமாக இருந்தவர் ஜீன் ஹென்றி டுனாண்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர். 1864ல் 15 நாடுகளுடன் தொடங்கப்பட்ட இச்சங்கம் இன்று 192 நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. போரில் காயமுற்றவர்களுக்கு உதவி, பாதுகாப்பு என்ற மனிதாபிமான நோக்கோடு உருவான இச்சங்கம் இன்று சர்வதேச அளவில் மனித குலத்தின் துயர் துடைக்கின்ற ஒரு தொண்டு நிறுவனமாக உருவாகியுள்ளது.

மனிதநேயம், பாரபட்சமின்மை, நடுவு நிலைமை, தனித்தன்மை, தன்னார்வ தொண்டு, ஒருமைப்பாடு, உலகலாவிய தன்மை என்ற இதன் ஏழு கோட்பாடுகள் சங்கத்திற்கு மட்டுமல்ல, தனி மனிதனை மேம்படுத்தவும், சமூகத்தை நெறிபடுத்தவும் உதவக்கூடியது. உலகின் எந்த பகுதியில் பேரிடர்கள் நேர்ந்தாலும் ஓடிச்சென்று உதவக்கூடிய ஒரே சங்கம் ரெட்கிராஸ் சங்கம் மட்டுமே. அதே நேரத்தில் எல்லா நாடுகளும் இதன் நடுநிலையான செயல்பாடுகளை அங்கீகரிக்கின்றன.

இளைஞர்களை தன்னார்வ தொண்டர்களாக உருவாக்க, உடல்நலம், சேவை, நட்புறவு என்ற மூன்று கொள்கைகளோடு உருவாக்கப்பட்டது தான் யூத் ரெட்கிராஸ் (இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம்). பள்ளியில் செயல்படுவது ஜூனியர் ரெட்கிராஸ் (இளையோர் செஞ்சிலுவைச் சங்கம்). இதில் தன்னார்வலர்களாக சேர்த்து , இரத்ததானம் செய்தல், மரம் நடுதல், பயில்கின்ற கல்லூரி வளாகத்தை தூய்மையாக பராமரித்தல் என்று சிறப்பாக சேவை செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இளையேர் செஞ்சிலுவைச்சங்கம், ஆசிரியராக பணியாற்றப் போகும் உங்களை மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் களாக மாற்றும்  என்றார் சா. விஸ்வநாதன்.

முன்னதாக கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேரா.பா.பிரபாகரன்  வரவேற்றார். நிறைவாக மாணவர் ஹரிஹரன் நன்றி கூறினார்.விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரிய மாணவர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top