Close
நவம்பர் 22, 2024 7:02 காலை

புதுக்கோட்டை நகரில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை

புதுகை கீழராஜவீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

புதுக்கோட்டை நகரில்   கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்துக்கு முன்மாதிரியான நகரமைப்பைக் கொண்ட இரு நகரங்களில் ஒன்று புதுச்சேரி மற்றொன்று புதுக்கோட்டை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுமார் 300 ஆண்டுகள் தனி சமஸ்தானமாக மன்னர்களின் ஆளுகையில் இருந்த சிறப்பை பெற்றது புதுக்கோட்டை. அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் நிர்வாக அதிகாரிகளாக பணியாற்றிய டாட்டன்ஹாமும், சேஷையாசாஸ்திரி ஆகிய இருவரும் முன் மாதிரியான நகரமைப்பை உருவாக்கிய சிற்பிகளாவர்.
முடியாட்சி மறைந்து மக்களாட்சி மலர்ந்த பின், சில ஆண்டுகள் மட்டுமே புதுக்கோட்டை நகரமைப்பு கட்டுக்குள் இருந்தது. குடிநீர்த்தேவையை சமாளிக்கும் நோக்கில் மன்னராட்சியில் அமைக்கப்பட்ட சுமார் 40 குளங்கள் மக்களுக்கு நீராதாரத்துக்கு அடிப்படையாக திகழ்ந்து வந்தன. நாளடைவில் மக்கள் தொகை அதிகரித்ததால், அகண்ட தெருக்கள், வீதிகள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிப்போனது. மேலும், நீர் நிலைகளுக்கு வரும் வரத்து வாரிகளும் ஆக்கிரமிப்புக்கு தப்பவில்லை. இதில் திருப்தியடையாத வர்களால் இணைப்பு சந்துகளும், வீதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை யில் கீழராஜ வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை பார்வையிட்ட ஆணையர் நாகராஜன் நகர காவல் ஆய்வாளர் குருநாதன், போக்குவரத்து துணைஆய்வாளர் சாத்தோ திலகராஜ் உள்ளிட்டோர்

இதன் காரணமாக, நகரில் இருந்து 39 குளங்களில் 10 -க்கும் மேல்பட்ட குளங்கள் காணாமல் போனதுடன், சாலைகளில் மழை நீரும், கழிவு நீரும் பெருக்கெடுத்து ஓடும் அவலமும் உருவானது. இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பை தொடர்ந்து கிழக்கு ராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பெரிய கட்டடங்களின் முகப்புகள் இடித்து அகலப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு  அறிவுறுத்தலின்பேரில்,  புதுகை நகரின் முக்கி்ய பகுதியான அண்ணாசிலையில் தொடங்கி கிழக்கு ராஜவீதி  மற்றும் விபத்துப் பகுதியாகவே மாறிப்போன பிருந்தாவனம் வரை இரு புறமும்  இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் காவல்துறை முன்னிலையில்  தொடங்கியது.
இப்பணிகளை புதுகை  நகராட்சி ஆணையர் நாகராஜன்   நகர காவல் ஆய்வாளர் குருநாதன், போக்குவரத்து  துணைஆய்வாளர் சாத்தோ திலகராஜ் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.
குறிப்பு:  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்- எம்எல்ஏ  அலுவலகம் செல்லும் சாலை  கடைக்காரர்களால்  மிகவும் மோசமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவற்றை அகற்ற முன்வர வேண்டுமென சமூக ஆர்வலர்கள்  கோருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top