Close
நவம்பர் 24, 2024 7:17 காலை

மீன்கள் இனப்பெருக்க காலம்… மீன்பிடித்தொழிலுக்கு 61 நாள்கள் தடை

மீன்பிடித்தடை காலம்

விசைப்படகுகள்(பைல் படம்)

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டுதமிழ்நாடு கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14 -ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய இருமீன்பிடி தளங்களில் இருந்து சுமார் 550 விசைப்படகுகளில் சுமார் 2500 மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய நாட்களில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக் கொண்டு அடுத்தடுத்த நாட்களில் கரைக்குத் திரும்புவது வழக்கம். வெள்ளிக்கிழமை வார விடுமுறை நாளாகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக  நிகழாண்டில் ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 14-ஆம் தேதி வரை விசைப்படகுகளில் மீன்பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனினும், நாட்டுப் படகு மீனவர்களுக்குத் தடை இல்லாததால் குறைந்த தொலைவுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், 61 நாள் தடை காலத்தைப் பயன்படுத்தி மீனவர்கள் விசைப்படகுகளில் ஏற்பட்டுள்ள பழுதுகள், சேதமடைந்த மீனபிடி வலைகளை சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வது வழக்கம்.

இது குறித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் தரப்பில் கூறியதாவது:

வசந்தத்தை வரவேற்கும் சித்திரை முதல் நாளில் நெய்தல் நில மக்கள் வறுமையை வரவேற்பதாய் இந்த 61 நாள்கள் அமைகின்றது. ஆண்டின் 365 நாள்களில் இனப்பெருக்கக் காலம், புயல், மழைக்காலம், கடல் சீற்றம், கடல் பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம் 150 நாள்கள்தான் மீன்பிடித் தொழிலில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, அரசு அறிவித்துள்ள இந்த மீன்பிடித் தடைக்காலத் தில்தான் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பிக்கக் கட்டணம், கல்லூரிப் படிப்பு முடிந்தவர்களுக்குத் திருமணம், சித்திரை வெயிலின் தாக்கத்தால் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கடுக்காக செலவுகள் வந்துகொண்டே இருக்கும். 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலத்தில் அரசு தரப்பில் தரப்படும் உதவித் தொகை என்பது  உயர்ந்துள்ள விலைவாசியை சமாளிக்க முடியாத விகிதத்தில்தான் உள்ளது என்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ள அனைத்து விசைப்படகு களும் வரும் 14 -ஆம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top