Close
நவம்பர் 22, 2024 4:42 மணி

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு… விவசாயிகள் வயலில் இறங்கி போராட்டம்

தஞ்சாவூர்

யூரியா உரத்தட்டுப்பாட்டைக்கண்டித்து தஞ்சையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில்  யூரியா தங்கு தடையின்றி வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் வயலில் இறங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், விழுதியூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக நெல்பயிர், பருத்தி, கரும்பு போன்றவற்றிற்கு அடிப்படை ஆதாரமாக இருந்துவருகின்ற யூரியா உரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளிலும், தனியார் கடைகளிலும் கிடைக்காமல் விவசாயிகள் கடும்  சிரமத்துக்குள்ளாகி  வருகின்றனர்.

சில தனியார் கடைகளில் பதுக்கல் முறையில் யூரியா இருப்பில் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு உடனடியாக தங்கு தடையின்றி யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க  வேண்டும்.

உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு விவசாய இடு பொருளான உரங்களுக்கான மானியத்தை கூடுதலாக வழங்கி உரங்களின் விலையை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முன் வரவேண்டும்.

விவசாயிகள் விளைவிக்கிற விளைபொருளுக்கு கட்டுபடி யான விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் எம். வெங்கடேசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை யூரியா வெற்று சாக்கு பைகளுடன் வயலில் இறங்கி நூதன போராட்டம்  நடைபெற்றது.

மாநிலக்குழு உறுப்பினர் சாமு. தர்மராஜ்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர். செந்தில் குமார்,நகரச் செயலாளர் கே. ராஜாராமன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு  முழக்கமிட்டு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top