தமிழக ஆளுநரின் தேநீர் விருந்தில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச்செயலர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் குரலையும், தமிழக மக்களின் கோரிக்கைகளையும் முற்றாக நிராகரிப்பதோடு, அரசுக்கு மேலானதொரு அதிகார மையமாக செயல்பட தொடர்ச்சியாக ஆளுநர் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்ட நீட் எதிர்ப்பு மசோதா உள்ளிட்டவற்றை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காமல் தமிழக சட்டமன்றத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகள், துணைவேந்தர் நியமன பிரச்சனை, இந்தியாவின் பன்மைத்துவத்தை நிராகரிக்கும் உரை.
இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழக மக்களின் உணர்வுகள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் எங்களது கட்சியின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட யாரும் பங்கேற்பதிலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.