அலமாரியிலிருந்து ஒரு புத்தகம்… குறிஞ்சி மலர்..
நா.பார்த்தசாரதி எழுதி கல்கியில் தொடராக வந்த “குறிஞ்சி மலர்’ என்ற நாவல் ஒரு துன்பவியல் நாவல் என்பேன். மதுரையை கதைக்களமாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் இது. இந்த நாவலில் அரவிந்தனும் பூரணியும் இரத்தமும் சதையுமாய் வாழ்ந்தார்கள் எனலாம்.
தொடர்கதையைக் காத்திருந்து பல வாசகர்கள் படித்திருப் பார்கள். கடைசி சில அத்தியாயங்கள் வெளிவந்த சமயம் பலர் மிகவும் துயருற்று இருந்தார்கள் என கேள்விப்பட்டி ருக்கிறேன். அரவிந்தன் நோய்வாய் பட்டிருந்தான். முடிவு என்னாகுமோ? என்ற கவலை.
சொல்லரிய பலதுறையும்
துயர் பெரிய தமிழ்நாட்டில்
மெல்ல மெல்ல நலம்காண
மேலெழுந்த தமிழ்ச் செல்வன்
செல்லரித்த பழமையெல்லாம்
சீர்திருத்த முன்வந்தோன்
புல்லரித்து மனம் வாடப்
போகின்றான் போகின்றான்
– என்ற துயர வரிகளுடன் அரவிந்தனின் மரணம் குறித்த வர்ணனைகளுடன் வெளிவந்த கடைசி அத்தியாயத்தைப் படித்துவிட்டு பல நாட்கள் உணர்ந்த அந்த வலியினை இன்றும் என்னால் உணர முடிகிறது.
கதையில் வரும் பூரணி, அரவிந்தன் போன்று அறநெறியில் வாழும் மனிதர்கள் இன்றும் நம்முடன் இருக்கிறார்கள் எங்கோ ஒரு மூலையில்.கதையின் நாயகி பூரணி எல்லா நல்ல குணாதிசயங்களும் கொண்ட குலமகள்.பூரணியைப் போல் பூரணியால்தான் இருக்கமுடியும் என்று நினைக்கும்படி விளங்கியவள் அவள்..
இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋