முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.4.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், தமிழ்நாட்டில் முதல் முறையாக 266 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் நவீன உபகரணங்களுடன் கூடிய 1,583 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட செவிலியர் கண்காணிப்பு மையங்களையும் மற்றும் 97 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 25 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 18 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள 516 படுக்கைகளுடன் கூடிய பன்முக உயர்தர தீவிர சிகிச்சை பிரிவுகளையும் திறந்து வைத்தார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 1 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், புதுக்கோட்டையில் 1 கோடியே 23 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவலகக் கட்டடம், திருவாரூர் மாவட்டம், ஆலத்தம்பாடி மற்றும் திருவாலங்காடு ஆகிய இடங்களில் 2 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.