புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வலியுறுத்தி கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ளது வத்தானாகுறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட வெ;வயப்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சி ஆதிதிராவிடர் கூட்டுக் குடியிருப்பு அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் கிரஷர், தார் பிளாண்டுடன் கல்குவாரி இயங்கி வருகிறது.
இந்தக் குவாரி அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக வும், குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. வெடியினால் ஏற்படும் அதிர்வால் குழந்தைகள் மன அளவில் பாதிப்பை சந்தித்து வருவதாகவும், கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். மேலும், கல்குவரி மற்றும் தார் பிளான்ட்டிலிருந்து வெளியாகும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசுபடுவதாகவும், பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும், குடிநீர் மாசுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், விவசாயம் பாதிக்கப் படுவதோடு குடிதண்ணீரும் மாசுபடுவதால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயப்பட்டி, வத்தனாக்குளிச்சி காலனி, சத்திரப்பட்டி, தண்ணீர் பந்தல்பட்டி, கதிரேசன்நகர், புதுவயல், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, மேற்படி கிரஷரை மூடக்கோரி கிராம மக்கள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சம்மந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. மேற்படி பகுதி கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது.
இதனைத் தொடர்ந்து திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கீரனூரை அடுத்த பொம்மாடிமலையில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் தனியார் கிரஷரை மூடக்கோரி சாலைமறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலாளர்கள் எஸ்.கலைச்செல்வன், எம்.ஆர்.சுப்பையா, ஊராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மாயழகு.
ஒன்றியக் கவுன்சிலர் பி.சூசை, பேரூராட்சி கவுன்சிலர் கே.மகாலெட்சுமி, முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.மைக்கேல், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிவேல், ரகுபதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சந்திரன், ராபர்ட், மாரிமுத்து உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, குளத்தூர் வட்டாட்சியர் பெரியநாயகி உள்ளிட்ட வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் தொடர்ந்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ மற்றும் ஊர்ப்பிரமுகரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுதொடர்பாக ஆய்வு நடத்தி ஆலையை மூடுவதற்காக உரிய நடவடிக்கை எடுப்பது எனவும், அதுவரை கிர~ர் ஆலையை தற்காலிகமாக மூடுவது எனவும் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தின் காரணமாக அந்த பகுதியில் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.