ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் நீலாவதி தற்கொலை முயற்சி தொடர்பான புகாருக்குள்ளான உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம் விசாரணை நடத்த எஸ்.பி. சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களாக ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் நீலாவதி. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தற்போது நீலாவதி தனது குடும்பத்தினருடன் சூரம்பட்டி வலசு, காந்திஜி வீதியில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13 -ஆம் தேதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நீலாவதி பணியில் இருந்தபோது காதல் கலப்பு திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
நீலாவதி இரு வீட்டு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்தப் பெண் தனது காதல் கணவருடன் செல்வதாக கூறியதால் அந்தப் பெண்ணை காதல் கணவருடன் அனுப்பி வைத்தார். புதுமண தம்பதிகள் ஈரோடு கள்ளுக்கடை மேடு பகுதியில் டீ குடித்துக் கொண்டிருந்த போது பெண்ணின் உறவினர்கள் அவரைக் காரில் கடத்திச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சூரம்பட்டி போலீசார் பெண்ணின் பெற்றோர் உறவினர்கள் உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் புதுப்பெண் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அந்தப் பெண் தன்னை பெற்றோர் கடத்தவில்லை என்றும் தனது விருப்பத்தின் பேரில்தான் அவர்களுடன் சென்றேன் எனவும், பெற்றோருடன் செல்ல விரும்புவதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே காதல் திருமணம் பெண் கடத்தப்பட்டது சம்பந்தமாக சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், உயர் அதிகாரிகளுக்குஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 7 மாதங்களாக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் நீலாவதி முறையாக இதுகுறித்து தெரிவிக்கவில்லை என கூறியும் உயர் அதிகாரி ஒருவர் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் நீலாவதியை கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனை அடைந்த நீலாவதி நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது திடீரென அவரது செல்போனில் இருந்து தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தனது குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். தனது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். பின்னர் சோலாரில் உள்ள தோழி வீட்டுக்கு சென்ற நீலாவதி திடீரென கீழே மயங்கி விழுந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த நீலாவதி நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் பணிக்கு திரும்பாமல் வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் நீலாவதி பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் அவர் கூறி இருப்பதாவது:-
உயரதிகாரிகள் திட்டியதால் மனவேதனை அடைந்து தற்கொலை செய்யப்போவதாக குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான். எனது இந்த ஒரு முடிவுக்கு ஒரு போலீஸ் உயர் அதிகாரியும் மட்டும் தனிப்பிரிவு ஏட்டு ஒருவரும் தான் காரணம். அந்த உயர் அதிகாரி சமுதாய ரீதியில் அரசியல் செய்கிறார். அந்த ஏட்டுவை ஒரு முறை நான் திட்டியதால் என்னை பழி வாங்குவதற்காக என்னைப் பற்றிய தவறான தகவலை உயர் அதிகாரிகளிடம் சொல்லி வருகிறார். இவர்களின் செயலால் தான் என்னை ஆயுதப்படைக்கு போக சொன்னது,எனது ஜீப் வாகனத்தை பறித்துக் கொண்டது போன்ற செயலில் உயர் அதிகாரி ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தான் நான் தற்கொலைக்கு முயன்றேன்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளார்.
நாளுக்கு நாள் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-
இன்ஸ்பெக்டர் நீலாவதி ஒரு உயர் அதிகாரி மீதும், தனிப்பிரிவு ஏட்டு மீதும் புகார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் இன்ஸ்பெக்டர் நீலாவதி மீதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. விசாரணைக் குழுவினர் உயர் அதிகாரி, தனிப்பிரிவு ஏட்டு, இன்ஸ்பெக்டர் நீலாவதியிடம் தனித்தனியாக விசாரணை நடத்துவார்கள். விசாரணை முடிவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.