பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டக்கூடாது என வலியுறுத்தி பொதுமக் கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டையை அடுத்து ரெங்கம்மா சத்திரத்தில் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகதார நிலையம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிபிஎம், மாதர் சங்கத்தினர் தலைமையில் திங்கள்கிழமை சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சிக்கு உட்பட்டது வடசேரிப்பட்டி கிராமம். இக்கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது.
மேற்படி இடம் வடசேரிப்பட்டி, தாவுதுமில், முல்லைநகர், சிவப்பட்டி, ரெங்கம்மாசத்திரம், முத்துடையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளியும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நடவடிக்கைக்கு அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.
பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக அடுக்குமாடி கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொதுமக்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கிராம மக்கள் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
வீடுகளில் கறுப்புக்கொடி:
இந்நிலையில், காவல்துறையினரின் பாதுகாப்போடு கடந்த மார்ச் 30-ஆம் தேதி அன்று நூற்றுக்கணக்கான போலீசாரின் உதவியோடு சம்மந்தப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டும் பணி தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததோடு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும், கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்படவில்லை. இந்நிலையில், கட்டிடம் கட்டும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமலும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
சாலைமறியல் போராட்டம்:
இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்டிடம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டையை அடுத்த சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்.
மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சண்முகம், சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.ஜோ~p, ரகுபதி. ஓன்றியக் கவுன்சிலர் கண்ணதாசன், பேரூராட்சி கவுன்சிலர் கே.மகாலெட்சுமி மற்றும் கிராம பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, தங்கள் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் 528 வீடுகளுக்கும் தேவைப்படும் தண்ணீருக்காக நிலத்தடிநீர் உறிஞ்சி எடுக்கப்படும். இதனால், தங்கள் பகுதியில் விவசாயம்; பாதிக்கும். குடியிருப்பிலிருந்து கழிவு நீர் வெளியாகி விளைநிலங்களைப் பாதிக்கும். அதனால் ஒருபோதும் அடுக்குமாடி குடியிருப்பை அந்த இடத்தில் கட்ட விடமாட்டோம். ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளபடி அந்த இடத்தில் பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.
சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக புதுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.