பேரறிவின் சிறுப்பிள்ளைத்தனங்களும்.. சிற்றறிவின் மேதாவித்தனங்களும் கூடிய கலவைகள் நிறைந்த மண்ணின் மைந்தர்களில் ஒருவரான ஜெயகாந்தன் பிறந்த நாள்..
சமக்கால படைப்பின் மீதான கோபத்தில் 30 வருடங்களுக்கு மேலாக எழுதுவதை நிறுத்திய பிறகும், இருக்கும் போதும்
இறந்த பிறகும் பேசப்படுகிற படைப்பாளியாக இருந்தவர்.
சிலர் தான் இலக்கிய உலகில் இப்படி இருந்திருக்கிறார்கள். அதற்கு முத்தாய்ப்பாக இருந்தவர் என ஜெயகாந்தனை சொல்லலாம்..
தனது கருத்தியலை தைரியமாக அப்பட்டமாக சொன்னவர். சிறுகதைகள் மூலம் வெகுவாக பேச வைத்தவர். முரண்பாடு களின் மொத்த உருவமாக திகழ்ந்த இலக்கிய முரடன். அவருடைய கலையுலக இலக்கிய உலக அனுபவங்களின் தொகுப்பு அவர் எப்படியான ஆளுமை என்பதை எளிதாக சொல்லிவிடும்.
புதுமை செய்கின்ற ஒவ்வொரு படைப்பாளியும் மரபு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது உள்வாங்கி அதில் தேவையான மாற்றங்களை செய்திருக்கிறார்கள். ராமானுஜரில் ஆரம்பித்து விவேகானந்தர் பாரதி எல்லோரும் இதைத் தான் செய்திருக் கிறார்கள். இது மட்டுமே காலத்தை வெல்லும் திறமை படைத்தது என்று தோன்றுகிறது.
நாவல் என்கிற தலையணையின் கட்டுமானத்தை உடைத்து குறுநாவல் என்பதைப் பிரபலமாக்கியவர் ஜெயகாந்தன்.
மொழி பெயர்ப்புக் கதைகளை நினைவுறுத்துவது போல் இவர் நடையிருந்த போதிலும் வலுவான தர்க்கமும் மிகை தவிர்த்த உணர்வுகளும், கனமான உள்ளடக்கமும் நடையின் சலிப்பை மறக்கடித்து விட்டன எனலாம்.
ஆரம்பகாலப் படைப்புகள் அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையின் பேசப்படாத பிரச்னைகளை வெளிப்படை யாக அவர்களுடைய கண்ணோட்டத்திலேயே பேசியது. அவற்றில் சில உலக இலக்கியக்கிங்களுக்கு நிகரானவை. இவரது எழுத்துகள் புதிய இலக்கியங்கள் படைபவர்களுக்குத் தூண்டுதல் அளிப்பதாக அமைந்தது.
இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋