Close
நவம்பர் 22, 2024 11:48 மணி

கண்மாய் குளங்களில் இலவசமாக வண்டல் மண் எடுத்துக் கொள்ளலாம்: ஆட்சியர் அனுமதி

புதுக்கோட்டை

கண்மாய் குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம், வீடுகட்டும் பொதுமக்கள் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம்.

புதுக்கோட்டை

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  வெளியிட்ட தகவல்.
தமிழ்நாடு சிறு கனிம விதி 2 (அ)-ன் படி விவசாயிகள் தங்கள் வயல்களின் மண்வளத்தினை மேம்படுத்துவதற்காகவும் மண் பாண்டங்கள் செய்வதற்காகவும், சொந்த வீட்டு உபயோகத் திற்காகவும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்வள ஆதாரத் துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள 1361 கண்மாய் மற்றும் குளங்களில் 93,51,552 கனமீட்டர் அளவு வண்டல் மண்ணை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண் டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம், வீடுகட்டும் பொதுமக்கள் ஆகியோர் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம்.

வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம்) பிரிவிற்கு அனுப்பி அனுமதி பெற்றுகொள்ளலாம்.

நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், எக்டருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர், எக்டருக்கு 222 கனமீட்டர், வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர், மண்பாண்டம் செய்ய 60 கன மீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும்.

வண்டல் மண் எடுக்கும் போது கீழ்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். குளத்தின் கரையின் உயரத்தின் இரண்டு மடங்கு தொலைவில் சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது.

மேலும் குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக் கூடாது. குளத்தின் கரையின் குறுக்கே குறுக்கு பாதைகள் ஏற்படுத்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணத்தைக் கொண்டும் சேமித்து வைக்க அனுமதி இல்லை. வண்டல் மண் எடுக்கும்போது கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பாடு களுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என  ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top