Close
நவம்பர் 22, 2024 6:53 காலை

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் நமக்கு இருக்கும் உரிமைகள் என்னென்ன?

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நமக்கான உரிமைகள்

பெட்ரோல் பங்க்குகளில் நமக்கு நிறைய உரிமைகள் இருக்கின்றன. எரிபொருள் நிரப்பினாலும் சரி அல்லது நிரப்பாவிட்டாலும் சரி, ஒரு சில முக்கியமான வசதிகளை நாம் இலவசமாகவே பெற முடியும். இந்த அடிப்படை உரிமைகள் பலருக்கும் தெரிவதில்லை. எனவே பெட்ரோல் பங்க்குகளில் நமக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றன? என்பதை தொகுத்து வழங்கியுள்ளோம்.

தர மற்றும் அளவு பரிசோதனை: நீங்கள் வாங்கும் எரிபொருள் மீது உங்களுக்கு சந்தேகம் இருந்தால், இந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம். இந்தியாவில் உள்ள எந்தவொரு பெட்ரோல் பங்க்கிலும், எரிபொருள் மீது உங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றால், ‘ஃபில்டர் பேப்பர் டெஸ்ட்’ (Filter Paper Test) பரிசோதனையை செய்து பார்க்க முடியும். இதற்கு கட்டணமெல்லாம் கிடையாது. இலவசம்தான்.

‘ஃபில்டர் பேப்பர் டெஸ்ட்’ என்பது எரிபொருளின் தரத்தை பரிசோதிக்க பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் எரிபொருள் குறைவாக வழங்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அளவு பரிசோதனையையும் செய்து பார்க்க முடியும். அதற்கான முழு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. எனவே தயக்கம் காட்டாதீர்கள்.

இந்த சேவைகளை பெறுவதற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகங்களால் கட்டணம் வசூலிக்க முடியாது. அதேபோல் இந்த சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாது என அவர்களால் மறுக்கவும் முடியாது. எனவே பணம் கொடுத்து வாங்கப்படும் எரிபொருளின் தரம் மற்றும் அளவுகளில் சந்தேகம் இருந்தால், தைரியமாக பரிசோதனைகளை செய்து பாருங்கள்.

ஜீரோவை காட்ட வேண்டும்: பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஒவ்வொரு முறை எரிபொருள் நிரப்ப தொடங்குவதற்கு முன்பாகவும், பம்ப் மீட்டரில் (Pump Meter) ஜீரோ செட் செய்யப்பட்டு விட்டதை வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக காட்ட வேண்டும். ஒரு சில இடங்களில் ஜீரோ செட் செய்யப்படாமல், அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் உள்ளன.

எனவே ஜீரோ செட் செய்யப்பட்டு விட்டதை காட்டிய பிறகு, எரிபொருள் நிரப்புமாறு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முன்னதாகவே வலியுறுத்துங்கள். இதற்கான உரிமையும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு சரியான அளவு எரிபொருள் உங்கள் வாகனத்திற்கு நிரப்பப்படுவதை இது உறுதி செய்யும்.

முதலுதவி பெட்டி: நகரங்களின் மைய பகுதி அல்லது தேசிய நெடுஞ்சாலைகள் என எங்கு வேண்டுமானாலும் சாலை விபத்துக்கள் நடக்கலாம். நீங்கள் சாலை விபத்தை பார்க்க நேரிட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவுங்கள். ஆனால் முதலுதவி பெட்டி இல்லாமல் எப்படி உதவி செய்வது என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

அப்படியானால் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு உடனடியாக சென்று முதலுதவி பெட்டி கேளுங்கள். பெட்ரோல் பங்க்குகளில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் முழு முதலுதவி பெட்டி இருப்பது அவசியம். இதன் மூலம் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்களால் இயன்ற உதவியை நீங்கள் தக்க நேரத்தில் செய்ய முடியும்.

கழிவறைகள்: பயணம் மேற்கொள்ளும்போது வீட்டில் இருந்து கிளம்பிய உடனேயே நம்மில் பலருக்கு மிகப்பெரிய கேள்வியாக இருப்பது கழிவறைகள்தான். குறிப்பாக சுத்தமான, சுகாதாரமான கழிவறையை கண்டறிய பெண்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். பயணத்தின்போது கழிவறையை பயன்படுத்தியாக வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படுகிறது என்றால், அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு செல்லுங்கள்.

பெட்ரோல் பங்க்குகளில் உள்ள கழிவறைகளை எந்தவிதமான கட்டணமும் செலுத்தாமல் நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இன்னும் சொல்லப்போனால் பெட்ரோல் பங்க்குகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவறைகளை பயன்படுத்துவதற்கு, நீங்கள் வாடிக்கையாளராக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இதை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்.

அதாவது பெட்ரோல் பங்க்குகளில் வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பினால் மட்டுமே கழிவறையை பயன்படுத்த முடியும் என பலர் நினைத்து கொண்டுள்ளனர். இது தவறு. வாடிக்கையாளராக இல்லாவிட்டாலும் கூட பெட்ரோல் பங்க் கழிவறைகளை இலவசமாக பயன்படுத்தி கொள்ள முடியும். பயணங்களின்போது இந்த வசதி நிச்சயமாக உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

டயர்களுக்கு காற்று இலவசம்: பெட்ரோல் பங்க்குகளில் உங்கள் வாகனத்தின் டயர்களுக்கு காற்றை நிரப்புவதற்கு பணம் செலுத்தி கொண்டிருந்தால், அதை இன்றோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கும் பணம் வாங்காமல், உங்கள் வாகனத்தின் டயர்களுக்கு காற்றை நிரப்ப வேண்டும். நீங்கள் எரிபொருள் நிரப்பினாலும், நிரப்பாவிட்டாலும் இந்த சேவை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது அவசியம்.

ஒரு வேளை காற்று நிரப்புவதற்காக உங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டால், புகார் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. 5 ரூபாய், 10 ரூபாய்தானே கேட்கிறார்கள் என அலட்சியம் காட்ட வேண்டாம். கேட்கும் தொகை எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் நீங்கள் புகார் அளிக்கலாம். பெட்ரோல் பங்க் நிர்வாகத்திடம் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ புகார் செய்ய முடியும்.

ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கிலும் புகார் புத்தகம் பராமரிக் கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் கிடைக்கும் வகையில் அவை எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களின் இணையதளங்கள் வாயிலாகவும் நீங்கள் புகார்களை பதிவு செய்ய முடியும்.

வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர்: பெட்ரோல் பங்க்குகளில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய மற்றொரு சேவை சுத்தமான குடிநீர். நீங்கள் பெட்ரோல் பங்க்குகளில் குடிநீரை குடிப்பதுடன், பாட்டில்களிலும் நிரப்பி கொள்ளலாம். குடிநீர் கிடைக்காமல் தடுமாறும் இடங்களில், இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேற் கண்ட வசதிகளில் எது கிடைக்காவிட்டாலும், தாராளமாக புகார் செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top