புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நிறைவு பெற்ற திட்டங்களை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் (03.05.2022) பங்கேற்று அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் நலனுக்காக எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறார் அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், ஆயிங்குடி மேற்கு மொச்சி பிள்ளையார் கோவில் அருகில் ரூ.6.36 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட வுள்ள பேவர் பிளாக் சாலை பணி, வல்லவாரி மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.11.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி, ஆயிங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுற்றுச்சுவர் கட்டுமானப் பணி.
ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.14.16 லட்சம் மதிப் பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, ஆயிங்குடி மேற்கில் ரூ.11.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மயான சாலை பணி, மாத்தூர் இராம சாமிபுரம் மாரியம்மன் கோவில் அருகில் ரூ.8.49 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள பேவர் பிளாக் சாலை பணி ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணிகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிங்குடி ஆதிதிராவிடர் காலனியில் ரூ.8.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர்; சு.சொர்ணராஜ், அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.