Close
நவம்பர் 22, 2024 12:22 மணி

தவ நடிக பூபதி பி.யு. சின்னப்பா பிறந்த நாள்: பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதுக்கோட்டை

பியு.சின்னப்பா நினைவாலயத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டம்

தவ நடிக பூபதி பி.யு. சின்னப்பா பிறந்த நாளை அவரது ரசிகர்கள் மற்றும்  சிலை அமைப்புக் குழுவினர்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

1940 -களில் தமிழ்நாட்டின் திரைப்பட நடிகர்களில் சொந்த குரலில் மிகச்சிறப்பாக பாடி நடித்தவர், கத்திச்சண்டை, சிலம்பம் மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுகளில் சிறந்து விளங்கியவர். ஏழை எளியவர்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கிய பெருமைக்கு சொந்தக்காரர் பி.யு. சின்னப்பா.

சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கு வகித்தவர் என பல்வேறு சிறப்புகளுடன் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த பிரபல நடிகர் பி.யு சின்னப்பாவின், 106 -ஆவது பிறந்த நாள் விழா இன்று புதுக்கோட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பொங்கல் வைத்து  கொண்டாடப்பட்டது.

நிகழ்வில், பி.யு சின்னப்பா சிலை அமைப்புக்குழு தலைவர் புலவர் துரைமதிவாணன் தலைமையில் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநரும், சிலை அமைப்புக் குழுவின் செயல் தலைவருமான ஏவிசிசி. கணேசன், நகராட்சி 40 -ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுப.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில நடைபெற்ற நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து, சின்னப்பா நகரில் 106 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  புதுக்குளம் பூங்கா என்ற பெயரை  பி.யு. சின்னப்பா பூங்கா என்று மீண்டும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும், வடக்கு ராஜ வீதி பால்பண்ணை சந்திப்பில் பி.யு. சின்னப்பாவுக்கு உருவச் சிலை அமைக்க நகராட்சி  அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய கடிதம்,  நகர்மன்ற தலைவர்  திலகவதி செந்திலிடம் நேரில் வழங்கப்பட்டது .

இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் கேஆர்ஜி.பாண்டியன்,   நரிமேடு  பழனிவேலு, சிலை அமைப்புக் குழு செயலாளர் பொன்வாசிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் சிவசண்முகராஜா, முத்துகணேசன், பீர்முகமது, ஓயாத அலைகள் கண்ணன், மாரிமுத்து, பொறியாளர் கண்ணன் மற்றும் சின்னப்பா நகர் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top