Close
நவம்பர் 22, 2024 7:27 மணி

வட்டாக்குடி இரணியன் நினைவுநாள்(மே.5) இன்று

தமிழ்நாடு

வட்டாக்குடி இரணியன்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வாட்டாகுடி கிராமத்தில் இராமலிங்கம்- தையல் அம்மாளுக்கு 1920, நவம்பர் 15 அன்று பிறந்தவர் மாவீரன் வாட்டாகுடி இரணியன். இவரது இயற்பெயர் வெங்கடாச்சலம்.

தனது 13 வது வயதில் உறவினர்களுடன் சிங்கப்பூர் சென்று கட்டிட வேலையிலும், தோட்டங்களிலும் வேலைபார்த்தார். அங்கெல்லாம் ஆங்கிலேயர்கள், சீனர்கள், மலேசியர்களின் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டது கண்டு அவருக்கு பொதுவுடைமைச் சிந்தனையாளர்களுடன் உறவு ஏற்பட்டது.
1943 -இல் சிங்கப்பூர் வந்த வங்கத்துச் சிங்கம் நேதாஜியைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார். ”இரத்தம் தாருங்கள்; விடுதலை பெற்றுத்தருகிறேன்” என்று சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் நேதாஜி வீரமுழக்கமிட்டதில் ஈர்ப்படைந்த இரணியன் நேதாஜி அமைத்த “இந்திய தேசிய இராணுவ”த்தில் சேர்ந்து பயிற்சியாளராக உயர்ந்தார்.
சுமார் பன்னிரெண்டாயிரம் தொழிலாளர்களைக் கொண்ட சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரானார்.
தனது 28 வது வயதில் இரணியன் தனது சொந்த ஊரான வாட்டாகுடிக்குத் திரும்பினார். 1947 -இல் விடுதலையடைந்த இந்தியாவில்.. நேதாஜிக்கு எதிர் சிந்தனை கொண்டவர்களின் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததும், பணக்கார சக்திகள் தொழில் முதலாளிகளாகவும், நிலப்பிரபுக்களாகவும் மாறியிருப்பதையும் கண்டு, இதற்காகவா.. இந்திய விடுதலைக்காக நேதாஜி பாடுபட்டார் என்ற கலக்கம் அவருக்குள் உருவானது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் விவசாயத் தொழிலாளர் களின் உரிமைக்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து ”விவசாய சங்கம்” ஒன்றை உருவாக்கினார். நிலப்பிரபுக்களுடன் மோதி விவசாயத் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தினார்.

இதை பொறுக்க முடியாத நிலப்பிரபுக்கள் காவல்துறையின் உதவியுடன் இவர்மீது பல வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனர். 1950 -ஆம் ஆண்டு மே மாதம் 5 -ஆம் நாள் இரணியனையும் ஆம்லாப்பட்டு ஆறுமுகத்தையும் காவல் துறையினர் பிடித்தனர். ஆறுமுகத்தையும் இரணியனையும் காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றது.
தனது 30 வது வயதில் விவசாய தொழிலாளர்களின் உரிமைக்காகப் பாடுபட்ட இரணியன் காவல்துறையால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட தினம் மே 5.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top