புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்துமாவட்ட ஆட்சியர்கவிதா ராமு தலைமையில் செய்தியாளர் குழுவினருடனான பயணம் மேற்கொள்ளப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், தமிழக அரசின் ஓராண்டு சாதனை களை விளக்கி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் (07.05.2022) பயணம் மேற்கொள் ளப்பட்டது.
இதில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தக்கோட்டை ஊராட்சியில் முல்லை அரும்பு சுயஉதவிக்குழுவினர் மூலம் காளான் வளர்ப்பு குறித்தும், வேங்கிடகுளம் ஊராட்சியில் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழுவினர் மூலம் பட்டுப்புழு வளர்ப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டபின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
முதலமைச்சர் தலைமையிலான அரசு கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு புத்துயிர் ஊட்டும் வகையில், அவர்கள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, புதிதாக தொழில் தொடங்க கடனுதவிகளும் வழங்கி வருகிறார்கள்.
அதன்படி திருவரங்குளம் ஒன்றியம், கொத்தக்கோட்டை ஊராட்சியில் முல்லை அரும்பு சுயஉதவிக்குழுவினர் மூலம் காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினருக்கு ஆதார நிதியாக ரூ.15,000 மும், பொருளாதார கடனாக ரூ.5,00,000 இதில் ரூ.1,25,000 அரசு மானியமாக வழங்கப்பட்டு காளான் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நாள்தோறும் குறைந்தபட்சமாக ரூ.500 முதல் இலாபம் ஈட்டி வருகின்றனர். மேலும் இக்குழுவினரை ஊக்கப்படுத்தும் வகையில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், காளானை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருள் அங்காடி அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
பட்டு புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வரும் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக் குழுவினர்களுக்கு ரூ.15,000 சுழல் நிதி வழங்கப்பட்டு, மல்பெரி செடி வளர்த்து பட்டு புழு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பட்டு வளர்ச்சித் துறையின் மூலமாக தேவையான பயிற்சியும், விற்பனை சந்தைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இவர்களுக்கு பொருளாதார கடனாக வழங்கப்பட்ட ரூ.9 லட்சத்தில், தொழில் சிறந்து விளங்கியதன் மூலம் ரூ.6 லட்சம் திரும்ப செலுத்தப்பட்டது. முதலமைச்சரால் வழங்கப்பட்ட கடனுதவிகள் மூலம் பல்வேறு தொழில்களில் மகளிர் அனைவரும் சிறந்து விளங்கி தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர்.
அதற்காக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்காக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் காளான் மற்றும் பட்டு புழு வளர்ப்பு கூடாரம் அமைக்கப்பட்டு வருகிறது.
எனவே மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்திக்கொண்டு தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் பயணத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வேளாண் துணை இயக்குநர் பெரியசாமி, பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ரெங்கபாப்பா, உதவி திட்ட இயக்குநர் ராஜாமுகமது மற்றும் செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.