Close
நவம்பர் 22, 2024 6:18 மணி

புதுக்கோட்டையில் முன் மாதிரிச் சாலை அமைக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறுமா?

புதுக்கோட்டை

புதுகையில் மாதிரி சாலை, தூய்மைப்பகுதியாக்க திட்டமிடப்பட்ட பழைய பேருந்து நிலையத்திலிருந்து டிவிஎஸ். கார்னர் வரையிலான திருமயம் சாலை.

புதுக்கோட்டை நகரில் பிற நகரங்களைப் போல தூய்மைப்பகுதியுடன் கூடிய முன் மாதிரிச்சாலை அமைக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட புதுக்கோட்டை மாவட்டம் தமிழக வரலாற்றில் அரிய பெரும் பொருள் காட்சிக்கூடமாகத் திகழ்கிறது. இம்மாவட்டத்துக்கென பல தனிச்சிறப்புகளும் உண்டு.

அதிக எண்ணிக்கையில் குகைக்ககோயில்களும், ஆயிரத்துக்கு மேல்பட்ட கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ள இடம், மிக அதிக எண்ணிக்கையில் ரோமாபுரி தங்க நாணயங்கள், தொல்லியல் பழமைச் சின்னங்கள், கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாகத் திகழும் கோயில்கள், சரித்திர தொடக்ககாலத்தில் வழக்கில் இருந்த பிராமிக் கல்வெட்டுகள், பழந்தமிழ் கல்வெட்டுக்களும், தமிழ் எழுத்து வளர்ச்சி வரலாற்றை அறியும் கல்வெட்டுக்கள் நிறைந்த மாவட்டம் என நீண்ட நெடிய சிறப்பைப் பெற்றதுடன் சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக (சமஸ்தானம்) திகழ்ந்த பெருமைக்குரிய ஒரே மாவட்டம் புதுக்கோட்டை.

தொண்டைமான் மன்னராட்சி காலத்தில் புதுச்சேரி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு நகரின் நடுவில் அமைந்திருந்த மன்னர் அரண்மனையை மையமாக வைத்து நான்கு திசைகளிலும் நேர் கோட்டில் தலா 4 அடுக்கு முறையில் மொத்தம் 16 வீதிகளுடன் இந்த நகரமைப்பு உருவாக்கப்பட்டது.

நாடு விடுதலை அடைந்து ஓராண்டுக்குப் பின் 1948 -ல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்திய குடியரசுடன் இணைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் ஒரு வருவாய் கோட்டமாக இருந்த புதுக்கோட்டை கடந்த 1974 -ல் தமிழகத்தின் 15 மாவட்டமாக புதுக்கோட்டை உருவானது. சுமார் 21.95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதுகை நகராட்சியில் சுமார் 1.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.

தமிழகத்தின் முன் மாதிரி நகரங்களில் ஒன்றாகிய புதுக்கோட்டையில் திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களைப் போல தூய்மைப் பகுதியுடன் கூடிய சாலை இல்லை என்ற மனக்குறை நகர மக்களிடம் தேங்கி நிற்கிறது.

புதுக்கோட்டையிலும் எம்.ஜி.ஆர் சிலையில் இருந்து டி.வி.எஸ். கார்னர் வரை உள்ள சாலையை தூய்மைப் பகுதியாக அறிவித்து பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். ஏனென்றால் இந்தச் சாலையில் தான் நீதிமன்றம், ஆட்சித் தலைவர் முகாம் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முகாம் அலுவலகம், 125 ஆண்டுகளைக் கடந்த அரசு மன்னர் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, 100 ஆண்டுகளைக் கடந்த அரசு பிரகதாம்பாள் மேனிலைப்பள்ளி, முக்கிய பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் தங்கும் ரோஜா இல்லம், மாவட்ட நீதிபதி இல்லம் ஆகியவை அமைந்துள்ளன. எனவே, இந்தச் சாலையை தூய்மை பகுதியாக உருவாக்க வேண்டுமென நகர் நல இயக்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இக்கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில், கடந்த 15.3.2013 -ல் மாவட்ட ஊராட்சிக்குழு சார்பில் புதுக்கோட்டை நகரில் தூய்மைப்பகுதியுடன் சாலை அமைக்க ரூ. 3.75 கோடியில் திட்ட மதிப்பீடு கருத்துருவை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இத்திட்டத்தை பரிசீலனை செய்து அரசு அனுமதி அளிக்காதது அனைத்துத் தரப்பினருக்கும் ஏமாற்றமளித்தது.

இது குறித்து நகர நல இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர். சம்பத்குமார் கூறியது:
புதுக்கோட்டை நகரம் மிகவும் அழகாக திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்ட நகரம். இன்று பெரும்பாலான வீதிகளும் குப்பை மேடாகக் காட்சி தருகின்றன. தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பல நகரங்களில் தூய்மைப் பகுதி என சில பகுதிகளை அறிவித்து அதனை சுத்தமாகப் பராமரிக்கின்றனர்.

திருச்சியில் அய்யப்பன் கோயில் உள்ள பகுதியானது தூய்மைப் பகுதியாக அறிவித்துப் பாதுகாக்கப்படுகிறது. அதைப் போல புதுக்கோட்டை நகரிலும் நாங்கள் குறிப்பிட்டுள்ள சாலையை தூய்மைப்பகுதியாக அறிவித்து பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலரும், ஓய்வு பெற்ற பேராசியருமான சா. விஸ்வநாதன் கூறியது: புதுகை நகரில் தூய்மைப் பகுதியாக அறிவிக்கப்பட்டு மாதிரி சாலையாகப் பராமரிக்கத் தகுதியானது இந்தச்சாலை. இதை பராமரிக்க வேண்டியது நகரவாசிகள் ஒவ்வொருடைய கடமை. இந்நிலையில், கடந்த 2013 -ஆம் ஆண்டில் பிரகதாம்பாள் பள்ளி தொடங்கி மாமன்னர் கல்லூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் பலவிதமான கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட, நகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக் கொண்டு சென்றதைத் தொடர்ந்து கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

புதுக்கோட்டை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் புதுக்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் மன்னர் கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து, மன்னர் கல்லூரி சுற்றுச் சுவரில் லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பதிவு செய்தார்கள். ஆனால், தற்போது  அவை யாவும் புதிய புதிய கடைகள் முளைத்து வருவதால், சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற மகாத்மா காந்தி, தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி, அகிலன், பாரதியார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் எழுத்துகள் ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வருகிறது.

புதுக்கோட்டை

முதலில் காந்தியின் வாசகங்கள்சேதப்படுத்தப்பட்டது.முறையிட் டோம்; பயனில் லை.பின்னர் பாரதி யின் ஆத்திச்சூடி மறைக்கப்பட்டது. முறையிட்டோம். பயனில்லை. இப்போது ஆவின் நிறுவனம் “இரவோடு இரவாக ” கடைபோட்டு முத்துலெட்சுமி அம்மையாரை மறைத்து விட்டது. தீரர் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார், அகிலன் போன்றவர்கள் புதுக்கோட்டைக்கு மட்டும் பெருமை சேர்க்கவில்லை.

தமிழகத்திற்கே பெருமை சேர்த்தவர்கள்.அவர்களின் பெருமை இன்றைய தலைமுறை அறியக்கூடாது என்பதில் யாருக்கும் அக்கறை இல்லை என்பது வேதனைக்குரியது. புதுக்கோட்டை நகரின் அனைத்து முக்கிய சாலைகளுமே ஆக்கிரமிப்பின் பிடிக்குச்சென்றுவிட்டன. எஞ்சியிருப்பது இந்தச்சாலை மட்டும்தான். இதை முன்மாதிரி சாலையாக மாற்றினால் மட்டுமே தப்பிக்கும். ஆனால், நடக்கும் நிகழ்வுகள் அதற்கு சாத்தியமில்லை என்பதை உணர்த்து கின்றன. இந்தச்சாலையை தூய்மைப்பகுதியாக தமிழக அரசு தாமதமின்றி அறிவிக்க வேண்டும் என்றார்.

மாவட்ட திட்டக்குழு முன்னாள் தலைவரும், மாவட்ட ஊராட்சிக்குழுவின் முன்னாள் தலைவருமான வி.சி.ராமையா கூறியது: நகர் நல இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அந்தச் சாலையின் இருபக்கமும் கட்டை கட்டி, நடைமேடை அமைத்து, அழகுச் செடிகளும், நிழல்தரும் மரங்களும் அமைத்து பராமரிக்க திட்ட மதிப்பீடு செய்து, திட்டக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி ரூ.3.75 கோடி மதிப்பிலான திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. ஆட்சி மாறியுள்ள நிலையில், நகருக்கு அடையாள மாகத் திகழும் அந்தத்திட்டத்தை நிறைவேற்ற இங்குள்ள அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top