புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையை ஊர்வலமாக சென்று பெண்கள் இழுத்து மூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருவதாக தெரிகிறது. இந்த சூழலில் மூன்றாவதாக டாஸ்மாக் கடை ஒன்றை அங்கு அமைக்க முயற்சிகள் நடந்தன. இதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இருப்பினும் அப்பகுதி வாசிகளின் எதிர்ப்பை மீறி நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட நேற்று டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி வாசிகள் மற்றும் பெண்கள் அறிவித்தனர். அதன்படி இன்று போராட்டம் நடத்த ஆயத்தமான போது அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனால் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக சென்று அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளின் ஷட்டரை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அப்பகுதியில் கோவில்கள், மசூதி மற்றும் பள்ளிகள் இருப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் பொது மக்களும் , மாணவர்களும் சிரமத்திற்கு உள்ளதாகவும் , மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அங்கு உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், டாஸ்மாக் கடைகளை அங்கு இருந்து அகற்றும் வரை போராட்டம் நீடிக்கும் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.