புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.
நமது நாட்டை காக்கும் உன்னத பணியில் ஈடுபட்டமுன்னாள் படைவீரர்களின் குறைகளை போக்கும் வகையில்; 3 மாதத்திற்கு ஒருமுறை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்ப டுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர் களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் படைவீரர்களி டமிருந்து நில ஒப்படைப்பு, வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, குடிநீர்வசதி, மின்விளக்கு வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 29 மனுக்கள் பெறப்பட்டு இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் சென்ற முறை குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
தமிழக அரசு முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக்கடன் வட்டி மானியத்திட்டம், தொழிற்கடன் மானியம், அரசு போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி இன்றைய தினம் 13 நபர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.2.60 லட்சம் மதிப்பிலான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் தி.கி.செண்பகவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணராஜ், அலுவலர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டனர்.