Close
நவம்பர் 22, 2024 3:47 மணி

அலமாரியிலிருந்து புத்தகம்… சோளகர் தொட்டி..!

அலமாரியிலிருந்து புத்தகம்

சோளகர் தொட்டி நாவல்

 வீரப்பன் உலாவிய காடுகளில் வாழ்ந்த பழங்குடி தமிழர்களே சோளர்கள்! தொட்டி என்பது அவர்கள் வாழும் ஊரின் பெயர். அடர்ந்த வனம் சார்ந்த சிற்றூர்!

தமிழகத்தின் கர்நாடக எல்லைப்புற மலை கிராமத்தில் வாழும் சோளகர் பழங்குடி மக்களைப் பற்றிய வாழ்வியலை கண்முன்னே நிறுத்துகிறார் நாவலாசிரியர் ச. பாலமுருகன்.

சோளகர் தொட்டியில் நடக்கும் சம்பவங்கள் எங்கோ ஒரு மலைமீது வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை யாக  நாம் வாசித்து அனுதாபப்படும் அதே வேளை அவ்வாறான சம்பவங்களாக இல்லாமல் ஆனால் அதே அளவு மனம் பாதிக்கப்படும் வன்முறையை நாம் நம்மைச் சுற்றி நடக்க அனுமதிப்பதிப்பதை எவ்வாறு எதிர்க்கொள்வதென்ற அச்சமே இந்நாவலைப் படித்து முடித்தவுடன் மிஞ்சும்.

இயற்கை வளங்களோடு இணைந்த பழங்குடித் தமிழர்களின் வாழ்வியலை பேசுவதோடு, வீரப்பன் தேடுதல் வேட்டையில் சிக்கி சிதைந்து போன துன்பியல் நிகழ்வுகளையும் விவரிக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அரசு இயந்திரங்களின் கொடூர அடக்குமுறையால்…சமூகம் தந்த பல நிகழ்வுகளால் தங்கள் வாழ்வை நேசித்த மண்ணைத் தொலைத்தவர்கள் என்பதற்கு இந்த புதினம் சாட்சி! இதுபோன்ற நூல்களை வாசிப்பதின் மூலமாக பழங்குடி தமிழ் மக்களை நேசிக்கத் தோன்றும்!

ஈழப்போர் நடந்த போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை நாமறிவோம். வரலாற்றில் நிலத்தின் பெயராலும், மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் நடைபெறும் எல்லா யுத்தங்களிலும் எப்போதும் பாதிக்கப்பட்டு நசுக்கப்படுவது.

அந்த யுத்தத்தில் எந்த விதத்திலும் பங்கேற்காத/கட்டாயத்தின் பெயரால் மாத்திரமே பங்கேற்ற அப்பாவி மக்களே என்பது மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நம்முள் பதிகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இலக்கிய படைப்பாளிகள், வாசகர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என யாரைச் சந்தித்தாலும்… இந்நூலை வாசித்தீர்களா…? என்ற கேள்வி கேட்கப்படுகிறது.
வாசிப்பை நேசிப்பவர்களுக்காக… எனது இன்னுமொரு பரிந்துரை. வாய்க்கும் போது வாசியுங்கள்.

இங்கிலாந்திலிருந்து… சங்கர் 🎋

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top