வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இதுமட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதபிறப்பு, வார விடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சுற்றுலா தலங்கள், கோவில்களில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
அந்த வகையில், வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமையையொட்டி பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கோவிலில் அலைமோதியது. மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.
இதனால் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக, தீர்த்தக்காவடி எடுத்து கொண்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள், கோவிலின் வெளிப்பிரகாரத்தில் தீர்த்தக்காவடிகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
வைகாசி மாத பிறப்பையொட்டி பழனி கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் அக்னி நட்சத்திர கழு திருவிழா நடந்து வருவதால் உள்ளூர் மட்டுமின்றி சேலம், கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் வந்து கிரிவீதிகளை சுற்றி வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இதில் பெண்கள் கடம்ப மலர்களை தலையில் சூடியும், ஆண்கள் பூக்களை கையில் ஏந்தியபடி கிரிவலம் வந்தனர்.
இதற்கிடையே ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் அடிவாரம், பஸ்நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் சீரமைத்தனர்.