Close
நவம்பர் 22, 2024 8:17 மணி

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது: தமுஎகச கோரிக்கை

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் நடந்த தமுஎகச மாநாட்டில் பேசுகிறார், கவிஞர் நா. முத்துநிலவன்

எழுத்தாளர் அகிலன் பெயரில் விருது  வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமென தமுஎகச கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நகரக்கிளை மாநாடு புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  மாநாட்டிற்கு எழுத்தாளர் சுரேஷ்மான்யா தலைமை வகித்தார்.

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் பொறுப்பேற்க வேண்டியது சமூகமா? குடும்பமா? என்ற தலைப்பில் கவிஞர் மு.கீதா தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. கவிஞர் ஜீவி தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.

தனித்துவம் நமது உரிமை, பன்மைத்துவம் நமது வலிமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பாடலாசிரியர் இரா.தனிக்கொடி தலைமை வகித்தார். கவிஞர் ராசி.பன்னீர் செல்வம் தொடக்கவுரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் பூபாளம் பிரகதீஸ்வரன் கருத்துரை வழங்கினார்.
கிளைச் செயலாளர் சு.பீர்முகமது வேலை அறிக்கை வாசித்தார்.

தமுஎகச

புதிய நிர்வாகிகள் தேர்வு: மாநாட்டில் தலைவராக கி.ஜெயபாலன், துணைத் தலைவர்களாக மு.கீதா, காசாவயல் கண்ணன், செயலாளராக சு.பீர்முகமது, இணைச் செயலாளர்களாக புதுகை புதல்வன், ஜோ. டெய்சிராணி பொருளாளராக க.உஷாநந்தினி ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன், செயலாளர் சு.மதியழகன் ஆகியோர் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர்நா.முத்துநிலவன் உரையாற்றினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  தமிழ்நாட்டிலிருந்து முதல் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அகிலன் பெயரில் சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு ஆண்டுதோறும் விருது வழங்க வேண்டும். புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் அவரது பெயரில் பெயர்பலகை வைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களை அந்தந்தப் பகுதியில் உள்ள நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

முன்னதாக புதுகை புதல்வன் வரவேற்றார். புதுகை பாண்டியன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top