அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன், அகவிலைப்படி, மருத்துவ வசதிகளை விரைந்து வழங்க வேண்டுமென சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) புதுக்கோட்டை மண்டல 15 -ஆவது ஆண்டுப் பேரவை கந்தர்வகோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரவைக்கு மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். மூத்த முன்னோடி பெரி.குமாரவேல் சங்கத்தின் கொடியை ஏற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தொடக்கவுரையாற்றினார். வேலை அறிக்கையைபொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், நிதிநிலை அறிக்கையை பொருளாளர் டி.சந்தானம் ஆகியோர் சமர்பித்தனர்.
கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, குடந்தை மண்டல பொதுச் செயலாளர் மணிமாறன், நாகை மண்டல பொதுச் செயலாளர் ராசேந்திரன், தோழமைச் சங்க நிர்வாகிகள் மாரிக்கண்ணு, லோகநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சம்மேளன துணை பொதுச் செயலாளர் மு.ஆறுமுகநயினார் நிறைவுரையாற்றினார்.
பேரவையில் தலைவராக கே.கார்த்திக்கேயன், பொதுச் செயலாளராக, ஆர்.மணிமாறன், பொருளாளராக எம்.முத்துக்குமார், துணை பொதுச் செயலாளராக எஸ்.செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக கே.சபாபதி வரவேற்றார். எஸ்.சாமி அய்யா நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு இலவச சேவை வழங்கிவரும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வரவுக்கும், செலவுக்குமான இடைப்பட்ட தொகைய அரசே ஏற்று வழங்க வேண்டும்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும். ஓய்வுபெற்றோர்களின் பணப்பலன், அகவிலைப்படி, மருத்துவ வசதிகளை விரைந்து வழங்க வேண்டும்.
சீனியாரிட்டி முறையில் சுழல்முறை பேட்ஜ் வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு மாறாக டீசல் கேட்டு கெடுபிடி செய்யக்கூடாது. எட்டுமணி நேர வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.