புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி, ஊரணி மேம்பாடு செய்யும் பணி, பூங்கா அமைக்கும் பணி உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை (24.05.2022) மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது;
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். கிராமப்புறங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை வசதி, குடிநீர் வசதி, மின்வசதி உள்ளிட்ட அடிப்படை தேவகைளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, முடிவுற்ற பணிகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தேர்வுநிலைப் பேரூராட்சியில் பொது நிதி திட்டம் 2021-22 ன் கீழ் பேருந்து நிலையத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2021-22ன் கீழ் கல்லுக்குண்டு ஊரணி ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யும் பணி பூமி பூஜையுடன் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவரங்குளம் ஒன்றியம், கல்லாலங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் சார்பில் 100 சதவீத பங்களிப்பில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்ட டிராக்டர் மற்றும் டிப்பர் ஊராட்சியின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மேலும் அறந்தாங்கி ஒன்றியம், மறமடக்கியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மறமடக்கி ஊருணி, புதுக்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பில் புதுக்குளம் ஆகியவை புனரமைக்கப்பட உள்ள பணிகள், திருவரங்குளம் ஒன்றியம், வடகாடு ஊராட்சியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமையவுள்ள செட்டிகுளம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பட்டு பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரூ.17.76 கோடி மதிப்பீட்டிலான பணிகள் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் அரசின் மூலம் செயல்படுத்தப் படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் வள்ளியம்மை தங்கமணி (திருவரங்குளம்), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் பூவேந்திரன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.