புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் 15-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. . வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.ஏ.குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் முனைவர் எம்.இளங்கோவன் வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கை வாசித்தார்.
தமிழாசிரியர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர் முத்தமிழ்ச்சுடர் முனைவர் மகா.சுந்தர் கலந்து கொண்டு, பல்கலைக் கழகத் தேர்வில் பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லூரியில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கினார்.
மேலும், முதல்வர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
விழாவில் அவர் பேசுகையில், நாம் உயிரோடு இருப்பதற்குக் காரணம் நமது பெற்றோர்களே. ஆனால் நாம் உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் நமது ஆசிரியர்களே. ஒரு ஆசிரியர் என்பவர் எளிமையாகவும் பிறருக்கு உதாரணமாகவும் இருக்கவேண்டும். தன் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருப்பவரே சிறந்த ஆசிரியர் ஆவார் என்றார்.
வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் பி.கருப்பையா, பொருளாளர் கவிஞர் ஆர்.எம்.வீ.கதிரேசன், கைக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கநாயகி சுப.செல்வராசு, ஆலோசகர் முனைவர் ஏ.ஏ.ஞானசுந்தரத்தரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் முதல்வர் ஜீவானந்தம், உதவிப்பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் திருவள்ளுவன் நன்றி கூறினார்.