Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

புதுக்கோட்டையில் இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் புகையிலை எதிர்ப்பு நாள் பேரணி

புதுக்கோட்டை

இந்திய பல் மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை சார்பில் நடைபெற்ற புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பேரணி

இந்திய பல்மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை சார்பில் புகையிலை எதிர்ப்பு (31.05.2022) நாள் பேரணி   செவ்வாய் கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணியை இந்திய பல்மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளைத்தலைவர்  அ. சையதுசபியுல்லா தொடக்கி வைத்து பேசியதாவது:

உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகமெங்கும் மே மாதம் 31 -ஆம் தேதி உலக சுகாதார  நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேந்து 1987ம் ஆண்டு அறிவித்தது.

புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகளை விளக்கி இந்திய பல் மருத்துவ சங்கம் அனைத்து கிளைகளும்  புகையிலை எதிர்ப்பு தினத்தினை கடைப் பிடிக்கிறோம்.

புகையிலை பயன்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள்:

இதய நோய்களான பெருந்தமணி தடிப்பு, இரத்த நாளங்களில் அடைப்பு போன்றவற்றைஏற்படுத்துகிறது. பக்கவாத நோயினையும் உருவாக்குகிறது. நுரையீரல், கண் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கும்.

தோலின் தன்மை மாறி சுருக்கங்கள் ஏற்பட்டு எண்ணெய் பசை குறைந்து இளம் வயதிலேயே முதுமை அடைந்ததுபோல் இருக்கும். வாய்நாற்றம், பற்கள் மஞ்சளாக மாறுவது, வாய் புற்றுநோய் வர முக்கிய காரணமாக உள்ளது.

மேலும் புகைப்பழக்கத்தை கைவிட்டால் 10 ஆண்டுகள் கூடுதல் ஆயுள் கிடைக்கும். உலகம் முழுவதும் புகையிலையினால்  ஒவ்வொரு 8 வினாடிக்கும். ஒருவர் உயிரிழக்கிறார் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

உலகம் முழுவதும் 110 கோடி பேர் புகைப்பிடிக்கின்றனர். இதில் 50% பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். புதுக்கோட்டையில் 19.6% பேர் புகையிலையை பயன்படுத்து வதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புகையிலையில் நிகோடின், கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக், ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 4000க்கும் அதிகமான ரசாயனங்கள் கலந்துள்ளன. அதில் 69 வகை ரசாயனங்கள் புற்றுநோயை உருவாக்கும்.

புகையிலை மட்டுமல்லாது எல்லாம் போதைப்பொருள்களுமே மனிதகுலத்திற்கு எதிரானவையே அதை உணர்ந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க எல்லோரும் கரம் கோர்க்க வேண்டும். புகைப்பழக்கத்தை விடுங்கள் புதுவாழ்வு பிறக்கட்டும் என்றார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரியில் நிறைவடைந்த பேரணியில் இந்திய பல்மருத்துவ சங்க புதுக்கோட்டை கிளை  செயலர் டாக்டர் ஆ. மினியாஸ் , பொருளாளர் டாக்டர் க.ராமு, மாவட்ட பல் சுகாதார கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.கே. அப்துல்மஜீத் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top