Close
நவம்பர் 22, 2024 5:02 மணி

திருவொற்றியூர் ஸ்ரீ கல்யாண வரதராஜப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேரில் ஆய்வு

சென்னை

திருவொற்றியூர் காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்திய இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு.

 திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது இங்கு நடைபெற்று வரும் குடமுழுக்கு பணிகளை விரைவில் முடித்திட அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:

சுமார் 450 ஆண்டுகள் பழைமை கொண்ட ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் கடைசியாக 2003 -ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.  பன்னிரண்டு ஆண்டுகளுக்குள் நடைபெற்றிருக்க வேண்டிய குடமுழுக்கு பல்வேறு காரணங்களால் நிலுவையில் இருந்து வருகிறது.

 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. ரூ.80 லட்சம் செலவிலான ராஜகோபுரம் மற்றும் சீரமைக்கும் பணிகள் நன்கொடையாளர் நிதி, திருக்கோயில் நிதி உள்ளிட்டவை களைக் கொண்டு நடைபெற்று வருகிறது.

சிதிலமடைந்து உள்ள திருக்குளம் பராமரிப்பற்ற நந்தவனம் உள்ளிட்டவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குடிநீர் வசதி,  கழிவுநீர் வெளியேற்றும் வசதி, கழிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 நீண்ட காலமாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைவு படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  பணிகளை விரைவாக மேற்கொண்டு வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் இக்கோயிலின் குடமுழுக்கு விழா நடத்தி முடிக்கப்படும்.

பழமையான கோயில்கள் சீரமைக்கப்படும்:

சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமை கொண்ட கோயில்கள் சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும்  சுமார் 80 பழைமையான கோயில்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

கோயில் நிலங்கள் பல்வேறு வகையிலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், முறையான ஆவணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எனவே கோயில் நிலங்களை மீட்கவும், வாடகை, குத்தகைதாரர்களை முறைப்படுத்தவும் ஆவணங்களைச் சரிபார்க்கவும், நில அளவீடு செய்யவும் 4  மாவட்ட வருவாய் அலுவலர்கள்,  38 வட்டாட்சியர்கள், 38 நில அளவையாளர்கள் அயல் பணி அடிப்படையில் வருவாய் துறையில் இருந்து இந்து அறநிலைத்துறை இயக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழு கோயில் நிறங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.  கோயில் நிலங்கள் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 கல்யாண வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு 7 ஏக்கர் நிலம் வேலி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.  இன்னும் 7 ஏக்கர் நிலம் தனியார் ஒருவரால் மிகக்குறைந்த வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்போர் குறைந்தபட்ச வாடகையாக வழிகாட்டு மதிப்பில் 0.1 சதவீதம் ஒரு சதவீதம் வாடகையாக செலுத்திட வேண்டும். இதனை உறுதி செய்யும் வகையில் சிறப்புக் குழு செயல்படும்.

5 கோயில்களில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள்:

வழிபாட்டுத் தலங்களாக இருந்து வரும் திருச்செந்தூர், திருத்தணி, ராமேஸ்வரம், பழனி,  சமயபுரம் உள்ளிட்ட கோயில்கள் சுற்றுலா தளங்களை போல மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவிலில் ரூ.200 கோடி செலவில் திருப்பதியை போல வரிசையில் சென்று தரிசிக்க காத்திருக்கும் அரங்கம் அமைக்கும் திட்டம் உள்ளது. இதற்கான செலவில் ரூ. 125 கோடிவரை எச்.சி.எல். நிறுவனம் நன்கொடை அளிப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் அனுமதி வேண்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் கோயில்:

புராதான நகரங்களில் ஒன்றான திருவொற்றியூரில் பல்வேறு அறநிலையங்கள் செயல்பட்டு வந்துள்ளன. ஏராளமான சொத்துக்களும் உள்ளன. இதில் செயல்பாட்டில் இல்லாத அறநிலையங்களின் சொத்துக்களை சமூக விரோதிகள் அபகரித்து வருவதாக கூறப்படும் புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்.

 திருவொற்றியூர் வடக்கு மாட வீதி அருகே சாலை விரிவாக்கப் பணியின்போது அகற்றப்பட்ட திருவள்ளுவர் கோயில் மீண்டும் அதே மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.  தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் திமுக ஆட்சியில் அறநிலையத்துறையில் வரலாற்று சிறப்புமிக்க சாதனைகள் படைக்கப்படும் என்றார் அமைச்சர் சேகர்பாபு.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க சென்னை வடகிழக்கும்மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., திருவொற்றியூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர், அறநிலையத்துறை ஆணையர் (பொறுப்பு) ஆர்.கண்ணன், இணை ஆணையர் தனபால், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு,  கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கவி கணேசன், தி.மு.க வட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்டப் பிரதிநிதி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top