ஆக்கிரமிப்பு அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இல்லாதவனுக்கு ஒரு நீதியா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கேள்வி எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்பு, அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மதுக்கூர் ராமலிங்கம் மேலும் பேசியதாவது:
தமிழக சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் ஒருவரை தேர்ந்தெடுத்துக்கொடுத்த கந்தர்வகோட்டை தொகுதி வாக்காளர்களுக்கு கட்சியின் மாநிலக்குழு சார்பில் வாழத்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசும்போது, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தோ, வேறுபல திட்டங்க ளுக்கோ கமிஷன் கொடுக்கிறேன் என்று யாராவது என்னை வந்து சந்திக்கக்கூடாது பகிரங்கமாக மேடையில் அறிவிக்கிறார். வேறு கட்சியில் இதைப் பார்க்க முடியுமா? இதைத்தான் நாங்கள் கம்யூனிஸ்ட் ‘கெத்து” என்கிறோம்.
கம்யூனிஸ்டுகளைப் பொருத்தவரை சட்டமன்றத்தைவிட மக்கள் மன்றத்தையே உயர்வாக மதிக்கிறோம். அதே நேரத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தொகுதி எம்எல்ஏ- எம்.சின்னதுரை உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவார். இத்தத் தொகுதி மக்களின் பாதுகாவலனாக இருப்பார்.
மோடி இன்றுடன் தனது 8 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ளார். அவர் ஆட்சிக்கு வந்தால் கருப்புப்பணத்தை மீட்டு ரூ.15 லட்சத்தை ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் போடுவேன் என்றார். ஆனால் ஒரு நயா பைசாகூட போட வில்லை. கருப்புப்பணமும், கள்ளப்பணமும் தான் அதிகரித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டுவந்து ஏழை, எளிய மக்களை கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினார். சமையல் எரிவாயுவுக்குக்கான மானியத்தை வங்கியில் போடுவேன் என்றார், போட்டாரா? இன்றைக்கு ரூ.1115 கொடுத்து ஒரு சிலிண்டரை வாங்க வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் அனைத்துவிதமான விலைவாசி களும் கட்டுக்கடங்காமல் எகிறிக்கொண்டு இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவைக் காட்டி புறம்போக்குகளில் காலம் காலமாக குடியிருந்துவரும் ஏழை மக்களின் வீடுகளை அரசு இடித்துவருகிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அளவில் ஆக்கிரமித்து கட்டியுள்ள பெரும் பணக்காரர்களின் கட்டிடங்களை இடிக்க அரசு தயங்குகிறது. தில்லியில் எங்கள் கட்சியின் தலைவர் பிருந்தாகாரத் தனிமனுஷியாக நின்று ஏழைகளின் வீடுகளை இடிப்பதைத் தடுத்து நிறுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 6-ஆம் தேதி 5 லட்சத்துக்கும் அதிகமான மக்களைத் திரட்டி புறம்போக்குகளில் குடியிருக்கும் ஏழை மக்களை அப்புறப்படு:த்தக்கூடாது.
அவர்களுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகுதான் தமிழக முதல்வர் இனிமேல் சம்பந்தப்பட்ட மக்களின் அனுமதி இல்லாமல் வீடுகளை இடிக்கமாட்டோம் என உறுதி அளித்தார்.
தஞ்சாவூருக்குப் பக்கத்தில் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்குச் சொந்தமான பல ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. அவர்களைப் பாதுகாக்கும் விதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திற்கு இணையாக வேறு இடத்தைக் கொடுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
இது அப்பட்டமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோகும் நடவடிக்கையாகும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் இருப்பவனுக்கு ஒரு நீதி, இலாததவனுக்கு ஒரு நீதி என்பதை எற்க முடியாது என்றார் மதுக்கூர் ராமலிங்கம். முன்னதாக கட்சியின் கந்தர்வகோட்டை வடக்கு மற்றும் தெற்கு கமிட்டிகளின் சார்பில் வளர்ச்சி நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.
பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமையன் உள்ளிட்டோர் பேசினார். கூட்டத்தில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.