தமிழ்நாடு முதலமைச்சர் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் 08.06.2022 அன்று வருகை தருவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி , சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் மாவட்ட ஆட்சியரகத்தில் (03.06.2022) அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோச னை மேற்கொண்டனர்.
இதில் சட்ட அமைச்சர் ரகுபதி பேசியதாவது: அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். அதனடிப்படையில் வருகின்ற 08.06.2022 அன்று நடைபெறும் விழாவில் பல்லாயிரக்கணக் கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கோடிக்கணக்கான மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை பொது மக்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரும் வகையில் திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
மேலும் பொதுமக்களின் தேவைகளான வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதிய திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி விழாவினை சிறப்பான முறையில் நடத்த வேண்டும் என்றார் அமைச்சர் எஸ்.ரகுபதி.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்று முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கும் 08.06.2022 வருகைதர உள்ளார்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை யில் ஆட்சி செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சியில் அதிகப்படியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
மேலும் முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாவை அனைத்து தரப்பினரும் பெருமை கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.
இதில், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், புதுக்கோட்டைஎம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன்,
மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆர்.ரம்யாதேவி (காவேரி-வைகை-குண்டாறு), பெ.வே.சரவணன் (நெடுஞ்சாலை நிலமெடுப்பு), உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.