சென்னை மணலியை அடுத்த விச்சூரில் சுங்கத்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ். சவுத்ரி திறந்து வைத்தார்.
சென்னை, எண்ணூர் காமராஜர், காட்டுப்பள்ளி அதானி துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி, இறக்குமதியாகும் சரக்குகளைக் கையாள்வதற்காக சென்னையை சுற்றிலும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சரக்குப் பெட்டக நிலையங்களை கண்காணிப்பதற்கும், ஆவண பரிசோதனைகளை மேற்கொள்வதற்குமா ஒவ்வொரு சரக்குப் பெட்டக நிலையத்திலும் கட்டமைப்பு வசதிகளை அந்தந்த நிறுவனங்களே அமைத்துத் தரவேண்டும்.
இதேபோல் சென்னை மணலியை அடுத்த விச்சூரில் சத்வா என்ற தனியார் சரக்கு பெட்டக நிலையத்தில் ரூ.1.75 கோடி செலவில் அமைக்கப்பட்ட சுங்கத்துறை அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை சென்னை மண்டல சுங்கத்துறை தலைமை ஆணையர் எம்.வி.எஸ்.சவுத்ரி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
மேலும் சரக்கு பெட்டகங்களை கையாள்வதற்கும் இருப்பு வைக்கப்பட்டுள்ள சரக்கு குறித்த விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் தெளிவாக ஆய்வு செய்து விரைவாக சரக்குகளை விடுவிப்பதற்கும் இந்நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு செயலி ஒன்றையும் சவுத்ரி தொடங்கி வைத்தார்.
இந்த அலுவலகத்தில் துணை ஆணையர், மதிப்பீட்டு மற்றும் சோதனை செய்யும் அதிகாரிகள், தடுப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்ட கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் லம் சுங்கத்துறை அலுவலகப் பணிகள் விரைவாக நடைபெற ஏதுவாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சென்னை சுங்கத் துறை முதன்மை ஆணையர் ஜி.ரவீந்திரநாத், ஆணையர் எஸ். ஏ. உஸ்மானி சத்வா குழும துணைத் தலைவர் எஸ். நரசிம்மன், இயக்குநர் எஸ்.பத்மநாபன், ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த பல்வேறு முகமை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்.என். சேகர், எஸ். நடராஜா, ஒய். லீலாதரன், ஏ.வி. விஜயகுமார், பி .எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.