கொரோனாவைத் தொடர்ந்து பூமியை அச்சுறுத்தத் தொடங்கி இருக்கும் மற்றொரு வைரஸ் குரங்கு அம்மை (Monkey Pox).
“குரங்கு கையில் பூமாலை”என்பார்கள் உண்மையிலேயே குரங்கு அம்மை கையில் பூமியா?
1. ஏன் குரங்கு அம்மை எனும் பெயர்?
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க காடுகளில் காணப்படும் குரங்குகளிலிருந்து தோன்றியதால் “குரங்கு அம்மை” என்னும் பெயர்.
2. எப்போது இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? 1958 -இல் குரங்குகளில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. உலகமே போலியோ தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், அதற்காக பயன்படுத்தப்பட்ட குரங்குகளில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
3. மனிதர்களில் ?
1970 -இல் ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) இது மனிதர்களிடம் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
4. ஏன் இப்போது உலகம் அலறுகிறது?
எப்போதும் காணப்படும் (Endemic countries) மத்திய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, மற்ற 20 நாடுகளுக்கும்(Non endemic countries) மேல் இது பரவி உள்ளதாக WHO அறிவித்துள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி இருக்கிறது.
6. இதற்கு முன்னர் வேறு நாட்டில் பரவியதே இல்லையா?
2003ல் அமெரிக்காவில் இவ்வாறு பரவியது. அதற்குக் காரணம் ஆப்பிரிக்க நாடான கானாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை எலிகள் மூலம், அமெரிக்க ஒரு வகை அணிலுக்கு (Praire dogs- நாய் என்று பெயரிலிருந்தாலும் இது ஒரு வகை அணிலே) இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக கண்டு பிடிக்கப்பட்டு, ஆப்பிரிக்காவிலிருந்து கொறித்துண்ணிகள் (Rodents) இறக்குமதியையே தடை விதித்தது அமெரிக்கா.
7. நோய் எத்தனை நாளில் ஏற்படும்?
நோய் அறிகுறிகள் தோன்றும் கால இடைவெளி(incupation period) 5 – 14 நாட்கள் என்று சொல்லப்பட்டாலும் 21 நாட்கள் வரை நீடிக்கலாம்.
8. எப்படி பரவுகிறது?
விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு (zoonosis), மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.நீர்த் திவலைகள், இரத்தம், சளி போன்ற உடல் திரவங்கள், பாலித் தொடர்பு, சில நேரங்களில் நோயாளிகள் பயன்படுத்திய பொருட்கள் மூலம்.
9. நோய் அறிகுறிகள்?
இது Pox viridae வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த orthopox வகையைச் சேர்ந்தது. பெரியம்மை (small pox) வைரசும் இந்த வகை தான். எனவே பெரியம்மை நோயுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறது.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி, நிணநீர் வீக்கம் (lymph nodes swelling) தோலில் தடித்த கொப்புளங்கள் (rashes) தோன்றுதல். அது காய்ந்து(Scab) உதிரும் வரை மற்றவருக்கு பரவும் தன்மையுடையது இந்நோய்.
10. தடுப்புமுறை/ சிசிக்சை?
நோய் தாக்கிய நபருடன் தொடர்பில் இல்லாமை, அவரை தனிமைப்படுத்துதல், அவருடன் கடந்த 21 நாட்களில் தொடர்பில் இருந்தவரை கண்காணித்தல்.நோய் பரவி இருக்கும் நாடுகளிலிருந்து வந்தவர்களை தொடர்ந்து 21 நாட்கள் கண்காணித்தல்.
தற்போது வரை குறிப்பிடத்தகுந்த மருந்துகள் (specific drugs) கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், பெரியம்மை தடுப்பூசி 85% பலனளிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.எதிர் வைரஸ் மருந்துகள் (antiviral drugs) “TECOVIRIMAT” போன்றவையும் பலனளிப்பதாக சொல்லப்படுகிறது.
எப்போதும் போல “வரும் முன் தற்காப்பே “நம்மிடையே உள்ள மிகச் சிறந்த மருந்து.அச்சப்படத்தேவையில்லை. எச்சரிக்கையாய் இருப்போம்!
நம்பிக்கையோடு…டாக்டர் ச.தெட்சிணாமூர்த்தி,MBBS., DDVL., தோல் நோய் மற்றும் அழகுக்கலை சிறப்பு மருத்துவர்.