தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தால் மாநில அளவில் அனைத்து கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியின் பரிசளிப்புவிழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான நேற்று சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள் முனைவர் திரு பொன்முடி, திரு மா. சுப்பிரமணியம், செஞ்சி திரு கே.எஸ். மஸ்தான், திரு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திரு நேரு, கவிஞர் திரு வைரமுத்து, மாநில சிறுபான்மை ஆணையம் தலைவர் திரு பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசுகையில், மாநிலம் முழுவதும் சொல்வீச்சில் சிறந்த இந்த இளம்படையினரை உருவாக்கித் தந்திருக்கும் பெருமை முதல்வர் ஸ்டாலினையேச் சேரும் என குறிப்பிட்டார்.
இவ்விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து தமிழ்ப் பேச்சுப் போட்டியில், புதுக்கோட்டை கற்பக விநாயகா செவிலியர் கல்லூரி மாணவி எஸ்.ஜமுனா முதல் பரிசும் , கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி சி.கடலரசி இரண்டாம் பரிசும் , மேலச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவி கா.புவனேஸ்வரி மூன்றாம் பரிசும்,
ஆங்கிலப் பேச்சு போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி சி.கடலரசி முதல் பரிசும் , குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவி வி.பவித்ரா இரண்டாம் பரிசும் , குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர் எஸ்.சந்தோஷ் மூன்றாம் பரிசும் பெற்று முதல்வரின் வாழ்த்தையும் பணப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை பெற்றனர்.
விழாவில் மாணவ மாணவிகளோடு புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பெனட் அந்தோணிராஜ், கலைஞர் கருணாநிதி மகளிர் கலைக்கல்லூரியின் முதல்வர் புவனேஸ்வரி, நடுவர்களாக பங்கேற்ற கவிஞர் பீர் முகமது மற்றும் கவிஞர் ஜோ. டெய்சிராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பரிசளிப்பு விழாவை முனைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், முனைவர் ஜெ ஹாஜா கனி, எஸ். டி. நெடுஞ்செழியன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.