Close
நவம்பர் 22, 2024 12:18 காலை

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கையை அரசு துரிதமாக எடுக்க வேண்டும்: கொமதேக வலியுறுத்தல்

கொமதேக

கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன்

தேங்காய் விலை வீழ்ச்சியை தடுப்பதற்கான நடவடிக்கை களை அரசு துரிதமாக எடுக்க வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கை: எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. தென்னை விவசாயிகள் விவசாயத்திற்கு செய்கின்ற முதலீட்டிற்கு கூட கட்டுப்படி ஆவதில்லை.  18 ரூபாய் இருந்த தேங்காய் தற்போது 8 ரூபாய்க்கு விற்கிறது. கிலோவிற்கு 105.90 ரூபாய் கொப்பரைக்கு ஆதார விலையாக அரசு நிர்ணயித்து இருந்தாலும் வெளிச்சந்தையில் 85 ரூபாய்க்கு தான் விற்கிறார்கள்.

கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகள் சிறு விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை. அதனால் சிறு விவசாயிகள் 85 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறார்கள். தென்னை விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து அமரவைத்து கருத்துகளை கேட்டு விலை வீழ்ச்சியிலிருந்து ஏழை விவசாயிகளை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

கீழ்கண்ட நடவடிக்கைகள் மூலம் தென்னை விவசாயிகளை பாதுகாக்க முடியும்.

1. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க வழிவகை செய்ய வேண்டும்.

2. தேங்காய் கீற்றுகளை சத்துணவுடன் கொடுக்கப்பட வேண்டும்.

3. கொப்பரை கொள்முதல் நிலையங்கள் அதிகப்படுத்த வேண்டும்.

4. குறைந்தபட்ச ஆதரவு விலையை தேங்காய்க்கு எடை அடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

5. சுற்றுப்புறச்சூழல் விதிமுறைகளின் நடைமுறையால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. பாமாயில் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

7. தென்னை நல வாரியத்தை தாமதமில்லாமல் அமைக்க வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு ஏழை விவசாயிகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்றார் அவர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top