Close
செப்டம்பர் 20, 2024 3:55 காலை

திருவொற்றியூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பேருக்கு முதியோர் உதவித் தொகை: கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. வழங்கல்

சென்னை

திருவொற்றியூரில் வருவாய்த்துறை சார்பில்  நடைபெற்ற ஜமாபந்தியில் பெண் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவினை வழங்கிய எம்எல்ஏ கே.பி.சங்கர். உடன் துணை ஆட்சியர் கவுசல்யா, தாசில்தார் அருண் உள்ளிட்டோர்.

திருவொற்றியூரில் நடைபெற்ற ஜமாபந்தியில் 30 பேருக்கு முதியோர் உதவித் தொகையை கே.பி.சங்கர் எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருவொற்றியூரில் வருவாய்த் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி என அழைக்கப்படும் வருவாய் தீர்வாய முகாமில்  சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித் தொகை உத்தரவுகளை சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் வழங்கினார்.

திருவொற்றியூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களின் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி எல்லையம்மன் கோயில் அருகே உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில்  துணை ஆட்சியர் கவுசல்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான உத்தரவுகளை வழங்கினார்.  அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து விதமான மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும்.

குறிப்பாக வாரிசுதாரர் சான்றிதழ் வழங்குவதில் நிலவும் தேவையற்ற காலதாமதத்தை தவிர்ப்பதற்கான முயற்சியில் அதிகாரிகள், ஊழியர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என அதிகாரிகளிடம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் கேட்டுக் கொண்டார்.

ஜமாபந்தியில் ஒரு நாள் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட தாகவும்,  இதில் பெரும்பான்மையான மனுக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, சாதித் சான்றிதழ், வாரிசுதாரர் சான்றிதழ் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. புதன்கிழமை மனுக்கள் பெறப்படும். ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் வட்டாட்சியர் அருண், சிறப்பு வட்டாட்சியர் சரவணக்குமார், தனி வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top