ஞானபீடம் விருது பெற்ற எழுத்தாளர் அகிலனுக்கு அவர் பிறந்த ஊரான பெருங்களூரில் மணிமண்டபமும் அவரது பெயரில் இலக்கிய விருதையும் அறிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு தமுஎகச வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13-ஆவது மாவட்ட மாநாடு புதுக்கோட்டையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.ஸ்டாலின் சரவணன், துணைத் தலைவர் ராமா ராமநாதன், செயற்குழு உறுப்பினர் மு.கீதா ஆகியோர் தலைமை வகித்தனர். கவிபாலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். செயலாளர் கி.ஜெயபாலன் வரவேற்றார்.
மாநாட்டை தொடங்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் வெண்புறா உரையாற்றினார். வேலை அறிக்கையை செயலாளர் சு.மதியழகன், கலை இலக்கிய அறிக்கையை துணைத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், வரவு-செலவு அறிக்கையை துரை.அரிபாஸ்கர் ஆகியோர் சமர்பித்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநிலக்குழு உறுப்பினர் ஜீவி, மாநில துணைச் செயலாளர் ஆர்.நீலா, கவிஞர் மு.முகேஷ் மருத்துவர் நா.ஜெயராமன் ஆகியோர் பேசினர்.
மாநாட்டில் தலைவராக ராசி.பன்னீர்செல்வன், துணைத் தலைவர்களாக சு.மதியகழன், மு.கீதா, கவிபாலா, காசாவயல் கண்ணன், செயலாளராக எம்.ஸ்டாலின் சரவணன், துணைச் செயலாளர்களாக துரை.அரிபாஸ்கர், சு.பீர்முகமது, நேசன்மகதி, இந்தியன் கணேசன், பொருளாளராக கி.ஜெயபாலன், செயற்குழு உறுப்பினர்களாக ரமா ராமநாதன், எஸ்.இளங்கோ, ரெ.வெள்ளைச்சாமி, சாமி.கிரீஷ், உஷாநந்தினி, கவிகார்த்திக் உள்ளிட்ட 41 பேர் கொண்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைச் செயலாளர் ஸ்ரீரசா உரையாற்றினார்.
கருத்தரங்கம்: மாநாட்டில் ‘படைப்பின் அரசியல் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கவிஞர் நா.முத்துநிலவன் தலைமை வகித்தார். கவிஞர் எஸ்.இளங்கோ வரவேற்றார். கருத்தரங்கில் கலந்துகொண்டு பேராசிரியர் அருணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் சு.பீர்முகமது நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்க சமீபத்தில் புதுக்கோட்டை வருகை தந்த விழாவில் அவருக்கு மாவட்ட ஆட்சியர் அளித்த புத்தகம் குறித்து மத அடிப்படைவாதிகள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். ஒருவர் தான் விரும்பிய புத்தகத்தை மற்றவர்களுக்கு பரிசளிப்பது அவரவர் உரிமை. அவற்றை சர்ச்சையாக்கி பிரச்னையை கிளப்புவது கண்டிக்கத்தக்கது.
பொது அறிவை வளர்க்கும் நூலகங்களில் போதுமான இடவசதியை ஏற்படுத்துவது, பள்ளி, கல்லூரி மாணவர்களை நூலகங்களில் உறுப்பினராக்குவது, வாசகர் வட்டங்களை மேம்படுத்துவது, நூல் அறிமுக விழாக்களை நடத்துதல், மாணவர்களுக்கான கண்காட்சியை நூலகத்துறை நடத்துவது.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தைச் சேர்ந்த குழந்தை எழுத்தாளர் வாண்டு மாமாவின் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளதை அடுத்து அவரது பெயரில் குழந்தை எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்க வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்களை மீண்டும் இயங்கச் செய்ய வேண்டும். ஊராட்சிகள் தோறும் திறந்தவெளி விளையாட்டு மைதானங்கள் அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தமிழகத்தின் முதல் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளருமான அகிலன் பெயரில் விருது வழங்க வேண்டும். அவரது பிறந்த ஊரான பெருங்களூரில் மணிமண்டபமும், புதுக்கோட்டையில் பழம்பெரும் நடிகர் பி.யு.சின்னப்பா நினைவு கலை மண்டபமும் அமைக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும், புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கு குறைந்த வாடகையில் ஒதுகீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.