Close
செப்டம்பர் 20, 2024 6:39 காலை

61 நாள் தடைகாலம் முடிந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள்

சென்னை

மீன்பிடித்தடைக்காலம் முடிந்தபின் சென்னை காசி மேடு மீன்பிடித்துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆயத்தமாகும் மீனவர்கள்

61 நாள் தடைகாலம் முடிந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காசிமேடு மீனவர்கள்.ஒரு வாரத்தில் மீன்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.

மீன் இனப்பெருக்கத்திற்காக  வங்கக் கடல் பகுதியில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த  61 நாள்கள் தடைகாலம் முடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுக மீனவர்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் நடைபெறுகின்றன என பல்வேறு கடல்சார் ஆய்வுகளில் கண்டறிந்து உறுதி செய்யப்பட்டதையடுத்து இந்காலங்களில் விசைப்படகுகள் மூலம் பெரிய வலைகளைக் கொண்டு மீன்களை பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி வீணாகி அழிவதன் மூலம் படிப்படியாக மீன்வளம் வெகுவாகக் குறைந்து விடும்.

இதைக் கருத்திஸ் கொண்டு கடந்த 2000-ஆண்டு முதல் வங்கக் கடல் பகுதியில் ஏப்.15-ஆம் தேதி முதல் மே 29 -ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு சார்பில் தொடக்கத்தில் தடைவிதித்தது.  ஆனால் பின்னர் இத்தடைகாலம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தடை காலம் 61 நாள்களாக நீடிக்கப்பட்டுத் தொடர்ந்து வருகிறது.

இந்தியாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள அனைத்து மாநிலங்களும் இதனை ஏற்றுகொண்டுள்ளன.  இதேபோல் இந்த ஆண்டுக்கான தடைகாலம் கடந்த ஏப்.15-ஆம் தேதி தொடங்கியது.  மேலும் மீன்பிடி தடை காலத்தில் மீனவர் நல கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஒரு குடும்பத்திற்கும் தலா ரூ 5 ஆயிரம் தமிழக அரசு சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தடைகாலம் வரும் ஜூன் 14-ம் தேதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்ததையடுத்து காசிமேடு மீனவர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முழுவதும் மீனவர்கள்.  உற்சாகத்துடன் கடலுக்குச் சென்றனர்.

ஐஸ்கட்டி, வலை உள்ளிட்ட தளவாடச் சாமான்களுடன் தயாரான மீனவர்கள்:

தமிழகம் முழுவதும் தற்போது சுமார் 5,500 விசைப்படகுகள் உள்ளன.  இதில் சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத் தில் மட்டும் சுமார் 1,100 விசைப் படகுகள் உள்ளன. தடைகாலத்தையொட்டி விசைப்படகுகளை பழுது நீக்கி புதுப்பிக்கும் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.

 இந்நிலையில் கடலுக்குச் செல்ல தயாராகும் வகையில் விசைப்படகுகளில் ஐஸ்கட்டிகள், டீசல் நிரப்பும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது.  பெரிய ஐஸ் கட்டிகளை இயந்திரங்கள் மூலம் உடைத்து தூளாக்கி படகுகளில் வைக்கப்பட்டுள்ள குளிர்சாதனப் பெட்டிகளில் நிரப்பினர்.

மேலும் ஒரு வார பயணத்திற்கான மளிகை சாமான்கள், உணவுப் பொருள்கள், குடிநீர் சமையல் பாத்திரங்கள், எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் வாங்கி படகுகளில் ஏற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 காசிமேடு துறைமுக மீன்பிடித் தொழிலில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாவட்ட, மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.   இவர்கள் படிப்படியாக காசிமேட்டிற்கு வந்தவண்ணம் உள்ளனர். எனவே இரண்டு மாதங்களுக்குப் பிறகு இரவு பகலாக பரபரப்புடன் காணப்படுகிறது.

 மீன் வரத்து அதிகரிப்பதால்  மீன்விலை குறைய வாய்ப்பு:

தடை முடிந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு இரு நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன.  இவர்கள் பெரும்பாலும் திரும்பி வர ஒரு வார காலம் ஆகும்.  மீன்டித் தொழில் திருப்திகரமாக இல்லாத நிலையில் தற்போது மீன்வளம் அதிகரிக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

 கடலுக்குச் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும். சுமார் குறைந்தபட்சம் ஐந்து நாள்கள் முதல் 15 நாள்கள்வரை கடலில் மீன்பிடித்து இப்படகுகள் படிப்படியாக கரை திரும்புவார்கள்.

  வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சூரை, கொடுவா, ஊழா, நண்டு, இறால் உள்ளிட்டவைகள் பெரும்பாலும் விசைப்படகுகள் மூலம்தான் கிடைக்கின்றன. எனவே இன்னும் சில நாள்களில் மீன்வரத்து அதிகரித்து படிப்படியாக மீன் விலை குறையும் என்கின்றனர் மீன் வியாபாரிகள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top