ராஜா ராஜகோபால தொண்டைமான் பிறந்த நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் இம்மாதம் 4 நாட்கள் நடைபெறுகிறது
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் பிறந்த நூற்றாண்டு விழாவை ஜூன் 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 264 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில், சமஸ்தானத்தின் 9-ஆவது மன்னரும், இந்திய குடியரசுடன் புதுக்கோட்டை சமஸ்தானத்தை இணைத்தவ ருமான ராஜா ராஜகோபால தொண்டைமான், 1922 -ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி பிறந்தார். தனது 6 -ஆவது வயதில் 1928- இல் இளவரசரானார். 1948-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் மன்னர் பொறுப்பை வகித்தவர்.
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரிட்டிஷாரிடமிருந்து நாட்டுக்கு விடுதலை கிடைத்தது. அப்போது சுதேசி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை 1948 -இல் பொறுப்பில் இருந்த ராஜா ராஜகோபால தொண்டைமான், தில்லி சென்று நாட்டின் உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல் முன்னிலையில் புதுக்கோட்டையை இந்தியாவுடன் இணைக்க கையெழுத்திட்டார். அப்போது சமஸ்தானத்தின் கஜானாவில் இருந்த ரூ. 48 லட்சம் நிதியுடன் மொத்த சொத்துகளையும் இந்திய அரசிடமே கொடுத்துவிட்டு வந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான்.
அதன்பிறகு புதுக்கோட்டை தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுவதற்காக, ராஜகோபால தொண்டைமானின் அரண்மனையை (100 ஏக்கர் வளாகம்) அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு. கருணாநிதி கேட்டுக் கொண்டதற்காக குறைந்தளவு அரசு நிதியைப் பெற்றுக் கொண்டு வழங்கினார்.
அவரது பிறந்த நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த விழாக்குழு அமைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் ஜூன் 23 -ஆம் தேதி வியாழக்கிழமை காலை தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமான பிரகதம்பாள் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் விழா தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மன்னரின் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, நீதிமன்ற வளாகத்திலுள்ள மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் சிலைக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் ஆகியோரும் மாலை அணிவிக்கின்றனர்.
மாலை 6 மணிக்கு திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக் கோயிலில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் இருந்து மன்னரின் பட ஊர்வலம், பல்வேறு வகையான நாட்டுப்புறக் கலைக் குழுக்கள் பங்கேற்புடன் நகர்மன்ற வளாகத்தை அடைகிறது. அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மாநில தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இரண்டாம் நாளான ஜூன் 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நகர்மன்ற வளாகத்தில், மன்னர் குறித்த புகைப்படக் கண்காட்சியை மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைக்கிறார். மாணவர் போட்டிகளில் வென்றவர்களுக்கு புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் செ. திலகவதிசெந்தில் பரிசுகளை வழங்குகிறார். தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் இராசு கவிதைப்பித்தன் தொடங்கி வைக்கிறார்.
3 -ஆம் நாளான 25-ஆம் தேதி சனிக்கிழமை மாலை கலைமாமணி சொர்ணமால்யாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து நடைபெறும் விழாவில், மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்.
4-ஆம் நாளான 26-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், நூற்றாண்டு விழா மலரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் வெளியிட்டுப் பேசுகிறார். தொழிலதிபர் எஸ். ராமச்சந்திரன் பெற்றுக் கொள்கிறார்.
மன்னரைப் பற்றிய நூலை, திருச்சி எம்பி சு. திருநாவுக்கரசர் வெளியிடுகிறார். முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா வாழ்த்திப் பேசுகிறார். மலரை கவிஞர் தங்கம் மூர்த்தி தொகுத்துள்ளார். நூலை ஜெ. ராஜாமுகமது எழுதியுள்ளார். மன்னர் காலத்தில் பிறந்து தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் 7 மூத்தோர்கள் பொற்கிழி வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர்.
தூத்துக்குடி வாசுகி மனோகரன் தலைமையில் சுழலும் பாட்டரங்கம் நடைபெறுகிறது. தஞ்சை சரபோஜி மன்னர் குடும்பத்தினர், சிவகங்கை மன்னர் குடும்பத்தினர், ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தினர் சிறப்பு விருந்தினர் களாகப் பங்கேற்கிறார்கள்.
தொண்டைமான் மன்னர் பரம்பரையின் தற்போதைய வாரிசுகளான ராணி ரமாபாய், திருச்சியிலுள்ள ராஜா ராஜகோபால தொண்டைமான், அவரது மனைவி முன்னாள் மேயர் சாருபாலா ஆர். தொண்டைமான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவின் செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்ட 40 பேர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர்.