Close
நவம்பர் 10, 2024 7:02 காலை

புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

புதுக்கோட்டை

பணிநீக்கத்தைக் கண்டித்து புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள்

தொழிலாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து புதுக்கோட்டை நகராட்சி துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த தொழிலாளர்களால மொத்தம் 223 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில், புதுக்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கென  47 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில்,  சிஐடியு தொழில்சங்க நிர்வாகி உள்பட 5 பேரை நகராட்சி நிர்வாகம் நேற்று இரவு வாய்மொழி உத்தரவின் மூலம் பணியிடை நீக்கம் செய்தது.  இன்று(சனிக்கிழமை) காலை வழக்கம் போல பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்  எந்த வித முன்னறிவிப்புமின்றி தொழிலாளர்கள் 5 பேரை பணியிடை நீக்கம் செய்ததைக் கண்டித்து பணிகளை புறக்கணித்து பேருந்து நிலையத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த  சிஐடியு உள்ளாட்சி சங்க மாவட்டத்தலைவர் கே. முகமதலிஜின்னா, மாவட்டச்செயலர் ஸ்ரீதர், துணைத்தலைவர் அன்பு மணவாளன்,  துணைச்செயலர்கள் ரத்தினம், சரவணன், யாசின், சிஐடியு நகர ஒருங்கிணைப்பாளர் முத்தையா உள்ளிட்டோர் அங்கு சென்று போராட்டம் நடத்திய தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

தகவறிந்து அங்கு வந்த நகர் நல அலுவலர் கார்த்திகேயன்  தொழில்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் இப்பிரச்சனை தொடர்பாக திங்கள்கிழமை முத்தரப்பு கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்ததையடுத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர். இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top