Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

பேச்சு வார்த்தையை மீறி கல்குவாரி மீண்டும் திறப்பு: எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் முற்றுகைப் போராட்டம்

புதுக்கோட்டை

தனியார் கல்குவாரி மீண்டும் திறந்ததைக் கண்டித்து சிபிஎம் எம்எல்ஏ சின்னத்துரை தலைமையில் குன்றாண்டார் கோவிலருகே நடந்த முற்றுகைப் போராட்டம்

பேச்சு வார்தையை மீறி மீண்டும் கல்குவாரியை திறப்பதற்கு  எதிர்ப்புத் தெரிவித்து  கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ சின்னதுரை  தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் வத்தனாகுறிச்சியில் சட்டவிரோத மாக செயல்பட்டுவரும் கல்குவாரியை நிரந்தாமாக மூடக் கோரி  சனிக்கிழமையன்று கந்தர்வகோட்டை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றாண்டார்கோவில் ஒன்றியம், வத்தனாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெவ்வயல்ப்பட்டி மற்றும் வத்தனாகுறிச்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக  எம்.எம் .கிரஷர் என்ற பெயரில் கிரஷர், தார் பிளாண்டுடன் கூடிய கல் தனியார் கல்குவாரி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தக் குவாரி குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இது அரசு விதிமுறைகளை மீறி செயல்படுகிறது. குவாரியில் வைக்கப்படும் வெடியால் அதிர்வுகள் ஏற்பட்டு குடியிருப்பு சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. வெடிச் சத்தத்தினால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது. குழந்தைகள் மனதளவில் பாதிப்படுகின்றனர்.

கல்குவாரி மற்றும் தார் பிளாண்டிலிருந்து வரும் தூசி மற்றும் புகையினால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால், மூச்சுத்தி ணறல், நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருகிறது. தண்ணீர் மாசடைந்து குடிநீர்த் தட்டுப்பாடு எற்படுகிறது. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

இந்தக் குவாரியை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்துள்ளனர். அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக எம்.சின்னதுரையிடம் கிராமமக்கள் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 15 அன்று புதுக்கோட்டையிலிருந்து திருச்சி செல்லும் தேசி நெடுஞ்சாலையில் நார்த்தாமலை அருகே எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள் குவாரியை தற்காலிகமாக மூடுவதாகவும், போராட்டக்குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் மீண்டும் குவாரியை திறக்க அனுமதிக்க மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்நிலையில், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த நான்கு நாட்களாக குவாரி மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த கிராம மக்கள் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரையிடம் முறையிட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை குவாரியை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார். வத்தானகுறிச்சி ஊராட்சிமன்றத் தலைவர் மல்லிகா மாயழகு, ஒன்றியக் கவுன்சிலர் பி.எஸ்.சூசை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், சி.அன்புமணவாளன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.தங்கவேல், டி.சலோமி, பி.சுசிலா, எஸ்.பாண்டிச்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் எம்.மகாலெட்சுமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

போராட்டத்திற்கு இடையே செய்தியாளர்களிடம்.சின்னதுரை எம்எல்ஏ கூறியதாவது:  இந்த குவாரியினால் வத்தனாக்குறிச்சி, வெவ்வயல்ப்பட்டி, வத்தனாக்குளிச்சிகாலனி, சத்திரப்பட்டி, தண்ணீர்பந்தல்ப்பட்டி, கதிரேசன்நகர், புதுவயில், திருமலைராயபுரம், உடையாம்பட்டி, சூசையப்பர்பட்டினம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்பல் 15-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி மதிக்கப்படவில்லை. சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதியில்லை. அரசுப் புறம்போக்கு 1.5 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து வருவாயத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 15 வருடங்களாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஒருமுறைகூட வரி செலுத்தப்படவில்லை.

எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மேற்படி குவாரியை நிரந்தமாக மூடுவது ஒன்றே இதற்கு தீர்வாக இருக்க முடியும். இதுகுறித்து தமிழக அரசு உரிய தலையிட்டு மேற்படி குவாரியை மூடி இப்பகுதி மக்களை பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.  போராட்டத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்தை நடத்தினர். சுமூக தீர்வு எட்டப்படும் வரை குவாரியை இயக்க அனுமதிக்கமாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top