Close
நவம்பர் 26, 2024 12:17 மணி

மின்சாரத் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க சிபிஎம் கட்சி கோரிக்கை

புதுக்கோட்டை

மின்தடையை சீரமைக்க வேண்டுமென சிபிஎம் கட்சி கோரிக்கை

மின்சாரத் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுவதைத் தடுக்க
விரைந்து நடவடிக்கை எடுக்க சிபிஎம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அறிவிக்கப்படாத மின்வெட்டின் காரணமாக விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மின்சாரம் என்பது மக்களின் அன்றாட வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒன்றாகும். அதிலும் கடும் வெப்பம் தகிக்கும் இக்காலத்தில் அடிக்கடி மின்வெட்டு நிகழ்வது சாதாரண மக்களை கொடும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறது.

வசதி படைத்தவர்கள் இன்வெட்டர் உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்த முடியும். சாதாரண ஏழை, எளிய குடும்பத்தினர், சிறுகடை வியாபாரிகள், சிறிய அளவிலான உணவகங்களை வைத்திருப்போர் மின் தட்டுப்பாட்டால் அவர்களின் அன்றாட பிழைப்பே கேள்விக்குறியாகி வருகிறது.
அதுபோல, விவசாயிகள் படும் வேதனையும் சொல்லிமாளாது. ஏற்கனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அந்த நேரத்திலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக விவசாயம் முற்றிலுமாக அழிந்துவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆளுகின்ற திமுக அரசுக்கு ஏற்கெனவே மின்வெட்டு குறித்த குற்றச்சாட்டு உள்ளது. தற்பொழுது உள்ள சூழலுக்கு மத்திய அரசின் மின்சார சட்டமும், எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களை வஞ்சிக்கும் போக்கும் இருப்பது உண்மைதான். ஆனால், அதையே காரணம் காட்டி மக்களை துயரத்தில் ஆழ்த்துவது நியாயமில்லை.
பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு தமிழக அரசும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top