தமிழ்நாடு முதலமைச்சரால் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ், திருமயம் மற்றும் ஆலங்குடியில் அறிவிக்கப்பட்ட புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தற்காலிகமாக செயல்படவுள்ள இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் முதலமைச்சரால் சட்டப்பேரவை விதி எண் 110 -ன் கீழ், திருமயம் மற்றும் ஆலங்குடியில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு கல்வி ஆண்டில் திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆலங்குடியில் தற்காலிகமாக கல்லூரி செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி மேற்காணும் இடங்களில் கல்லூரிகள் நடைபெறுவதற்கான வகுப்பறை வசதி, குடிநீர்வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, தேவையான வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் திருமயம், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் திருமயம், திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், முதலமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் குறித்தும், அவை செயல்படுத்தப்பட்டு வரும் நிலை குறித்தும் தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் குறித்தும், பணியாளர்களின் வருகைப் பதிவேடு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்கள் அனைவரும் உரிய நேரத்திற்குள் அலுவலகம் வருகை தருகின்றார்களா, பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சிமெண்ட் கிடங்கில் சிமெண்ட் மூட்டை இருப்பு மற்றும் விநியோகம் குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், கோப்புகளை முறையாக கையாளவும், அரசு திட்டங்களை உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஸ்ருதி, ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம், வட்டாட்சியர்கள் செந்தமிழ்செல்வன், பிரவினாமேரி, செந்தில்நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், குமரன், கோகுலகிருஷ்ணன், ஆயிஷாராணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.