Close
நவம்பர் 22, 2024 12:26 மணி

நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்துறை  ஆலோசனை

புதுக்கோட்டை

நிலக்கடலையில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்திட வேளாண்துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.

நிலக்கடலையில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து  வேளாண்துறை  ஆலோசனை தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள், நிலக்கடலை வேர் அழுகல் நோயினை கட்டுப்படுத்தி மகசூலினை அதிகப்படுத்திட வேளாண் இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும்பாலான வட்டாரத்தில் பரவலாக பயிரிடப்படும் நிலக்கடலையில், வேரழுகல் நோயினால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நோய், மேக்ரோபோமினா பேசியோலினா என்ற பூஞ்சான கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது. வேர் அழுகல் நோயினால் நிலக்கடலையில் 63 முதல் 100 சதவிகிதம் வரை மகசூல் இழப்புக்கு வாய்ப்புள்ளது. எனவே, வேர் அழுகல் நோய் பாதிப்பு இருக்கும் பகுதியில், ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடித்தல் மிகவும் அவசியமாகும்.

நோய் சுழற்சி:மண் மற்றும் செடி சருகுகளில் இப்பூஞ்சானத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்கநிலையில் இருக்கும். இதனால் முதன்மை பாதிப்பு மண் மற்றும் விதை மூலமாக ஏற்படும். இரண்டாம் நிலை பாதிப்பு, பாசன நீர் பண்ணை கருவிகள், கால்நடைகள், மனிதர்கள் மூலம் இப்பூஞ்சானத்தின் ஸ்கிலிரோசியம் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்: வெண்மையான பூசணவித்துகள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன. செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட செடியின் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்தும், கடுகு போன்ற சிறிய அளவு ஸ்கிலிரோசியம் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும், நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.

மேலாண் முறைகள்: மண்ணின் மேல் உள்ள பயிர் கழிவுகளை ஆழமாக உழவேண்டும். விதையை டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் அல்லது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூஞ்சான கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு டி. விரிடி ஒரு கிலோ என்ற அளவில் 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் சீராக விதைப்பதற்கு முன் தூவ வேண்டும். ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 200 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை நோய் பாதிக்கப்பட்ட செடியின் அருகில் உள்ள செடிகளுக்கு வேர் பகுதி மண்ணில் நனையும்படி ஊற்றி வேர் அழுகல் நோயை மேலும் பராவாமல் கட்டுப்படுத்தலாம்.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட நிலக்கடலை சாகுபடியாளர்கள், ஒருங்கிணைந்த முறையில் நிலக்கடலை வேரழுகல் நோயினை கட்டுப்படுத்தி இழப்பை தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top