அகிலன் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்று புதுக்கோட் டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை அருகே பெருங்களூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளியில், புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை மற்றும் புதுக்கோட்டை வாசகர் பேரவை இணைந்து ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் நூற்றாண்டு விழா, பெருங்களூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 27.6.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை.முத்துராஜா பேசியது:
அகிலன் நூற்றாண்டுவிழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். அகிலன் ஞானபீட விருது பெற்ற முதல் தமிழர் என்பது பெருங்களூரைச்சேர்ந்த வர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படத்தக்க செய்தி.
அவர் பிறந்த இந்த ஊரில் அவர் பெயரில் விரைவில் ஒரு நூலகம் அமைத்துத் தரப்படும். மேலும் புதுக்கோட்டையின் புகழ்பெற்ற ஞானாலயா நூலகத்திற்கு என்னுடைய சொந்த செலவில் உங்களை அழைத்துச் சென்று பார்க்கவும் ஏற்பாடும் செய்கிறேன். நீங்கள் எல்லோரும் அகிலனுடைய நூல்களை வாசிக்க வேண்டும். அவரைப் போன்று நல்ல எழுத்தாளர் களாக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் அவர்.
முன்னதாக, பெருங்களூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, அகிலன் தன் தொடக்கக்கல்வியை இங்கே பயின்றார் என்பதை நினைவு கூறும் வகையில் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் அகிலன் வாழ்ந்த இடத்தில் தற்போது கல்யாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
அந்த கல்யாண மண்டபத்தில் அகிலனுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அகிலன் நினைவாக அரசு மாதிரிப் பள்ளியில் “அகிலன் இலக்கிய மன்றம்” தொடங்கப்பட்டது. இறுதியாக அகிலன் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்வில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி, புலவர் மதிவாணன். அகிலன் மகள் அங்கயர்க்கண்ணி, வரலாற்று ஆய்வாளர் பூ.சி.தமிழரசன், கவிஞர் புதுகை புதல்வன், பெருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட பள்ளி சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில்.
பேராசிரியர் சிவ.கார்த்திகேயன், வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஊர் பெரியோர் கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வை ஒருங்கிணைத்த வரலாற்றுப் பேரவை செயலர் மாரிமுத்து நன்றி கூறினார்.