புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உதடு – உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் புதுக்கோட்டை மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய உதடு-உள் அண்ணம் பிளவு பட்டோருக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் (28.6.2022) நடைபெற்றது.
முகாமிற்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் து.ராஜா முகமது தலைமை வகித்தார். டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.ஹெச்.சலீம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் பெனிட்டா பெக் கலந்து கொண்டு பேசியதாவது: உதடு-உள் அண்ணப் பிளவு என்பது நோய் அல்ல முற்றிலும் குணப்படுத்தக் கூடியது. ஆரம்ப நிலையில் இதனை கண்டுபிடித்து முறையான அறுவை சிகிச்சை செய்யும் பொழுது மற்றவர்களைப் போல் இயல்பான முகத்தைப் பெற வாய்ப்புள்ளது.
மேலும் தி ஸ்மைல் டிரெய்ன் உதடு-உள் அண்ணப்பிளவு சீரமைப்பு மண்டல மையம் மூலமாக 14000-க்கும் மேற்பட்ட இலவச அறுவை சிகிச்சைகள் சிறந்த முறையில் செய்யப்பட்டுள்ளது என்றார்.
முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அறுவை சிகிச்சை பற்றியும் தங்குமிடம் மருந்து மற்றும் பிற சந்தேகங்களுக்கு முகாம் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் விளக்கமளித்தார்.
இம்முகாமில் உதடு அண்ணம் பிளவு பட்ட குழந்தைகள் மற்றும் ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மறு ஆய்வு செய்து கொண்டு பயன் பெற்றனர்.
முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் செய்திருந்தார். மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் பஷீர் அகமது நன்றி கூறினார்.