Close
நவம்பர் 23, 2024 1:05 மணி

திராவிடர் கழக மூத்த முன்னோடி நாமக்கல் சண்முகம் நூறாவது அகவை தின விழா: தலைவர்கள் நேரில் வாழ்த்து

தமிழ்நாடு

நாமக்கல் சண்முகத்தின் 100 வது அகவை தின விழாவில் அவரை வாழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் கழக அனைத்து பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகத்தின் ஒரு அங்கமாக தந்தை பெரியார் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன அறக்கட்டளையின் தலைவராக தந்தை பெரியாரால் நியமிக்கப்பட்டவரும், திராவிடர் கழகம் தோன்றிய நாள் முதல் அதிலே உறுப்பினராக இருக்கிற தந்தை பெரியாரின் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ள நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், பொத்தனூர் நகரில் வாழும் க.ச. என அழைக்கப்படும் க.சண்முகம் அவர்கள் தனது நூறாவது பிறந்த நாளை 2/7/2022 அன்று கொண்டாடினார்.

அவரை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் திராவிடர் கழக அனைத்து பொறுப்பாளர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடர் கழக பிரசாரச் செயலாளர் சீனி விடுதலை அரசு, வழக்கறிஞர் அருள்மொழி, கரூர் மாவட்ட திராவிட இயக்கங்களின் தலைவர்கள் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் உள்பட்ட ஏராளமான பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சி தொடர்பாக 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடம் மற்றும் கட்டிடங்களை திராவிடர் கழகத்திற்கு  நன்கொடையாக அளித்து அதில்  நூலகம் ஒன்று செயல்படவும், ஒரு பகுதியில் தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்தும் கொடுத்துள்ளார் க.சண்முகம் .

மேலும் தனது நூறாவது பிறந்த நாளுக்காக நண்பர்கள் திரட்டி கொடுத்த ரூ. 1 லட்சம் பணத்தை திருச்சி அருகே சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் என்ற அமைப்புக்காக நன்கொடையாக வழங்கி விட்டார்.

க.சண்முகம் தனது நன்றி உரையில், தந்தை பெரியாரின் வழி நின்று, தனது இறப்பு நிகழும் போது தனக்காக யாரும் மலர் மாலைகள் கொண்டு வந்து போட்டு பணத்தை வீணடிக்க வேண்டாம்.அதற்கு பதிலாக ஒரு உண்டியல் வைக்கப்பட்டு அதிலே வருகிறவர்கள் தொகைகளை போட்டு சேரும் தொகையை ஏதாவது ஒரு தானம் செய்வது ஏழைகளுக்கு பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனது இறுதி கால விருப்பமாக தெரிவித்தார்.

எல்லா மரண நிகழ்வுகளிலும் வீணாக மலர் மாலைகளைப் போட்டு பணத்தை வீணடிக்காமல் இதே போல பணம் பெற்று நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி  பேசும்போது, நம்முடைய நாடடிலே இல்லறம் துறவறம் என்று இரண்டு முன்பு இருந்தது. ஆனால் தொண்டறம் என்று ஒன்று ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் தான் நமக்கு கொடையாக கொடுத்துள்ளார்.பதவி, பணம், செல்வாக்கு இவற்றை எதிர்பார்க்காமல் மக்களுக்கு தொண்டாற்றுவதையே ஒரு அறமாக நமக்கு கற்பித்துள்ளார்.

எனவே இல்லறம் துறவறம் போல தொண்டறம் மிக முக்கியமானது அதனை நாம் செய்ய வேண்டும்.  பகுத்தறிவு உள்ள சிந்தனையாளர்களாக வாழ்பவர்கள் பலர் நூற்றாண்டுகளைக் கடந்து வாழ்கிறார்கள் எனவே அனைவரும் பகுத்தறிவோடு வாழ வேண்டும் என்றார் அவர்.

தமிழ் ராஜேந்திரன் பேசும்போது, தந்தை பெரியார், மதவாத வெறியர்களிடமிருந்து தமிழ்நாட்டை காக்கும் ஓசோன் படலமாக (லேயர்) பாதுகாப்பு கேடயமாக தந்தை பெரியார் இன்றும்  இருக்கிறார்.தமிழ்நாட்டில் பகுத்தறிவு பிரசாரம் மிக அதிக அளவில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top