Close
நவம்பர் 25, 2024 3:54 மணி

அல்பெலியன் நிகழ்வு   உண்மையா? தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

புதுக்கோட்டை

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

அல்பெலியன் நிகழ்வு   உண்மையா?
“நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே *அல்பெலியன் நிகழ்வு* என்று அழைக்கப்படுகிறது. இது நாளை காலை 5-27 மணிக்கு தொடங்கும்.
Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.இது ஆகஸ்ட் 22 இல் முடிவடையும்.
இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம். நமக்கு உடல்வலி,காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 90,000,000 கி.மீ. ஆனால் இந்த Alphelion Phenomenon காலத்தில், இரண்டிற்கும் இடையே உள்ள தூரம் 152,000,000 கி.மீ ஆக அதிகரிக்கும். அதாவது 66% அதிகரிப்பு.தயவுசெய்து இதை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சத்துள்ள உணவு உண்டு ஆரோக்கியத்தைப் பேணிக்கொள்ளுங்கள்.
இந்த செய்தி வெகு வேகமாக புலனங்களில் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. பலரும் இதனை பலருக்கு உதவும் எண்ணத்தில் பரப்பி வருகின்றனர்.
 இது Alphelion அல்ல… Aphelion…
நீள் வட்டப் பாதையின் ஒரு குவியத்தில் சூரியனை மையமாக் கொண்டு பூமி சுற்றி வருகிறது. அவ்வாறு சுற்றி வரும் போது  சூரியனிலிருந்து பூமி அண்மையாக உள்ள தூரம் Perihelion (சூரிய அண்மைநிலை). இது  14 கோடியே 73 லட்சம் கி.மீ. ஆகும். அதுவே சூரியனிலிருந்து சேய்மையாக உள்ள தூரம் Aphelion (சூரிய சேய்மை நிலை). இது  15 கோடியே 21 லட்சம் கி.மீ. ஆகும். இதற்கு இடையே ஆன உண்மை வித்தியாசம் 3.3% ஆகும். இந்த பொய் பரவல் தகவலில் 66% என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஜூலை 4 ஆம் தேதி வாக்கில் அப்ஹீலியனும் ஜனவரி 3 ஆம் தேதி வாக்கில் பெரிஹீலியனும் ஏற்படும். இது ஒவ்வொரு வருடமும் ஏற்படக்கூடிய சாதாரண நிகழ்வுதான். இந்த வருடம் மட்டும் எந்த சிறப்பும் இதற்கு கிடையாது.
மேலும் இந்த பொய் பரவல் தகவலில் குறிப்பிடுவதைப் போல அசாதாரண குளிர் எதுவும் இப்போது ஏற்பட்டு விடப் போவதில்லை. சென்ற ஆண்டைப் போலவே தான் இந்த ஆண்டும் இருக்கும்.   கோடைக்காலம், குளிர்காலம் பருவ மாற்றம் பூமி சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றி வருவதால் ஏறுபடுவது. அதற்கும் பூமி சூரியனுக்கு அருகில் வருவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இப்போது நமக்கு குளிர் காலமே இல்லை.  வட அரைகோளத்தில் வசிக்கும் நமக்கு டிசம்பர் ஜனவரி மாதம் தான் குளிர்காலம்.
குளிர்காலம் கோடை காலம் மழை காலம் என்று எந்த வித்தியாசம் ஏற்பட்டாலும் எந்த காலத்திலும் நல்ல சத்துள்ள வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிடுவதும் சக்கை உணவுகளை தவிர்ப்பதும் எப்போதும் நல்லது தான்.
இது போன்ற சில அணுக்கமான அன்பான வார்த்தைகளை மேற்பூச்சாக கொண்டு தேவையே இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளை எளிமையாக பரப்பி விடுகின்றனர்.
இதை அப்படியே நம்பி பல அப்பிராணிகளும் பரப்புவதும் பாராட்டுவதுமாக பொய்ப் பரவல் தகவல் மட்டுமே அதிகமாக பரப்பப்படுகிறது. அதற்கு எதிராக உண்மை பேசும் செய்திகள் உண்மையில் போய் சேருகின்றனவா இல்லையா என்று கூட தெரிவதில்லை என்கிறார் தமிழ்நாடு அறிவியல் இயக்க அறிவியல் பிரசார மாநில ஒருங்கிணைப்பாளர்  எஸ்.ஆர்.சேதுராமன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top