Close
செப்டம்பர் 20, 2024 8:51 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் நடைபெற்ற புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கவிதாராமு. உடன் புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள்

5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு ‘புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில், ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பேர் புத்தகம் வாசித்து சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து வருகின்ற ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 7 வரை 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகிறது.

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள், சிறந்த புத்தகங்களக்கான விருதுகள், இலக்கிய சொற்பொழிவுகள் எனத் திட்டமிடப் பட்டுள்ளது. அதனொரு மாணவர்கள், வாசகர்கள், பொது மக்கள் மத்தியில் புத்தகத்தின் அவசியத்தை விளக்கும் வகையில் ‘ புதுக்கோட்டை வாசிக்கிறது’ என்ற தலைப்பில் வியாழக்கிழமை வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 1976 பள்ளிகளிலும், நூற்றுக்கும் மேற்பட்ட கலை அறிவியல், பொறியியல், தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், 92 நுலகங்களிலும் வியாழக்கிழமை காலை 11.30 மணியிலிருந்து 12.30 வரை ஒரு மணி நேரம் மாணவர்கள் மற்றும் வாசகர்கள் தனக்குப் பிடித்த புத்தகங்களை வாசித்தனர்.

மேலும், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் அவரவர் பணியிடங்களில் இருந்து இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். ஒட்டு மொத்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்றுள்ள தாக புத்தக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

புத்தக வாசிப்பு இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தொடங்கி வைத்து பேசியதாவது: பொது அறிவு வளர வேண்டுமானால் மாணவர்கள் பாடத்திட்டத்தைத் தாண்டிய புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்தப் புத்தகத்தை வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசிக்கும் போது ஆழ்ந்த ஈடுபாடும் கவனமும் இருக்க வேண்டும்.

நான் எட்டாம் வகுப்பு படித்தபோது பள்ளி விடுமுறையின் போது கல்கி எழுதிய பொன்னியின் செல்வனை வாசித்தேன். அப்போது அதில் உள்ள கருத்துகள் எனக்கு சாரியாக புரியவில்லை. அடுத்தடுத்த முறை வாசிக்கும்போது எனக்கு புதிய, புதிய  விளக்கங்கள்  கிடைத்தது.

சிறிய வயதில் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக  மாறலாம்.  எந்த வகையான புத்தகமாக இருந்தாலும் நீங்கள் அதிலிருந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்பவராக இருக்க வேண்டும். ஆகவே, மாணவர்களாகிய நீங்கள் அன்றாடம் புத்தகம் வாசிக்கும் பழகத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் புத்தகத் திருவிழாவுக்கு தினமும்  பள்ளி மாணவர்களை  அழைத்து வர ஏற்பாடு செய்யப்படும். புத்தக விழா  வெற்றிபெற மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்  என்றார். மேலும், மாணவிகளுடன் அமர்ந்து புத்தகம் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தியதுடன், அவர்களுக்கு எந்த வகையான புத்தகங்கள் படிக்கப்பிடிக்கும் என கேட்டறிந்து பாராட்டினார்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சே.மணிவண்ணன், மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார், புத்தக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் கள் தங்கம்மூர்த்தி, நா.முத்துநிலவன், அ.மணவாளன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி.பாலகிருஷ்ணன், எம்.வீரமுத்து, மு.முத்துக்குமார், டி.விமலா, நகர் நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் நடைபெற்ற புத்தக வாசிப்பு நிகழ்வுகளில் அரசு அலுவலர்கள், அறிவியல் இயக்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top