மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி. நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
தற்போது அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 97.5 அடியாக உள்ளது.அணையின் பாதுகாப்பு கருதி பவானியாற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம், நெல்லித்துறை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம், சிறுமுகை உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது